

ஆந்திரத்தைப் பிரிப்பதை எதிர்த்து சீமாந்திரா பகுதியில் 2-வது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம் தொடர்ந்தது. இதனால் கடலோர ஆந்திரம், ராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திரா பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
பள்ளி, கல்லூரிகள், வங்கிகள், மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல்கள், ஹாப்பிங் மால்கள், கடைகள் மூடப்பட்டிருந்தன. அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படாததால் நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
காங்கிரஸ் அலுவலகங்கள், அந்தக் கட்சித் தலைவர்களின் வீடுகளின் முன்பு போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
கடலோர ஆந்திரம், ராயலசீமா பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு போராடுவதால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறுகின்றனர். பாதுகாப்பைப் பலப்படுத்த கடலோர ஆந்திரப் பகுதிக்கு கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக ஐ.ஜி. துவாரகா திருமலை தெரிவித்தார்.
சீமாந்திரா பகுதியில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பிரதான சாலைகளை போராட்டக்காரர்கள் அடைத்திருப்பதால் லாரிகள், வாகனங்கள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் காத்திருக்கின்றன.
பல்வேறு இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அப்போது குறிப்பிட்ட சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
விசாகப்பட்டினம் அருகேயுள்ள விசிநகரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சத்திய நாராயணாவின் வீடு உள்ளது. அவரது வீட்டை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.
இந்நிலையில், சனிக்கிழமை அவரது வீட்டை முற்றுகையிட போராட்டக்காரர்கள் பெருந்திரளாகக் கூடினர். அப்போது போலீஸார் மீது கற்கள் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறிதுநேரம் பொறுமை காத்த போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மீண்டும் மீண்டும் கூடிய போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
கடலோர ஆந்திரத்தின் கொத்தபட்டா, கிளாக் டவர் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவியும் திருப்பதி திருமலை வெறிச்சோடி காணப்பட்டது. ஆந்திரத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் போதெல்லாம் திருப்பதிக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால், இப்போது திருப்பதியிலும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதியில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.
அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்த 48 மணி நேர முழுஅடைப்பு சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 72 மணி நேர பந்த் அறிவித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமையும் முழு அடைப்பு போராட்டம் தொடர்கிறது.