

போலி சான்றிதழ்களைத் தடுக்கும் விதமாக, மாணவர்களின் புகைப்படத் துடன் கூடிய பட்டம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை அறிமுகப்படுத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) ஆலோசனை செய்து வருகிறது.
இது குறித்து யுஜிசி துணைத் தலைவர் எச்.தேவராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது: புகைப்படத்துடன்கூடிய சான்றிதழ்களை அறிமுகப்படுத்துவது குறித்தும், வேறு என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யலாம் எனவும் ஆலோசனை கேட்டு அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர் களுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அனைவரிடமிருந்தும் பதில் கடிதம் பெற்ற பின் இறுதி முடிவு எடுக்கப்படும். இதன்மூலம் போலி சான்றிதழ்களை தடுக்க முடியும் என்றார்.
கடந்த 17-ம் தேதி யுஜிசி இதுதொடர் பாகக் கடிதம் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி யில் உள்ள மகாத்மா ஜோதிபா பூலே ரோஹில்கண்ட் பல்கலைக்கழகம், இத்திட்டத்தை உடனடியாக அமல் படுத்த தயார் என தெரிவித் துள்ளது. மேலும், அதன் துணை வேந்தர் முஷாஹித் உசைன், “நாட்டின் அனைத்து பல்கலைக் கழகங்களின் பட்டம் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஒரே மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும். இதன் மூலம் போலியானவற்றை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்” என கருத்து கூறி உள்ளார். அரசு மற்றும் தனியார் பணி களில் சேர்ந்தவர்கள் சமர்ப்பிக்கும் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியே சரிபார்க்கப்படுகிறது.
உ.பி, பிஹார் மற்றும் தமிழகம் உட்படப் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி போலி சான்றிதழ்கள் சிக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் கூட தமிழகத்தில் போலி சான்றிதழ் தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்த ஒரு கும்பல் பிடிபட்டது. இதைப் பார்த்து சில நாடாளுமன்ற எம்.பி.க்கள், யுஜிசிக்கு கடிதம் எழுதி பரிந்துரை செய்ததாகவும், அதையடுத்து யுஜிசி பல்கலைக்கழகங்களுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் கருதப் படுகிறது.