

உண்மையில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதால்தான் இத்தகைய முடிவைத் தந்ததாக, 4 மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார்.
4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது சோனியா காந்தி கூறும்போது, "நான்கு மாநில தேர்தல் முடிவுகள் கட்சிக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மக்களின் இத் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சியினரை வாழ்த்துகிறோம்.
விலைவாசி உயர்வு உள்பட தேர்தல் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. எங்கள் மீது பலர் குறை கூறுகின்றனர் என்று எனக்குத் தெரியும். உண்மையில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. இல்லாவிடில் இதுபோன்ற முடிவை தந்திருக்க மாட்டார்கள்.
இந்தத் தோல்வி குறித்து நாங்கள் தீவிரமாக ஆராய்வோம். எங்களின் குறைகளை போக்கிக் கொள்வதற்கும் அல்லது செயல்படும் விதத்தை மாற்றிக்கொள்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.
இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மக்களவை தேர்தலில் பிரதிபலிக்காது. ஏனெனில், பொதுத் தேர்தல் என்பது மிகவும் வேறுபட்டது. சட்டமன்ற தேர்தலில், யார் நம்மை வழிநடத்துவது என்று மாநில அளவிலான தலைவர்களை பற்றியே மக்கள் யோசிக்கின்றனர். மேலும் சட்டமன்ற தேர்தல்களில் உள்ளூர் பிரச்னைகளே முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களவை தேர்தலில் தேசிய அளவிலான பிரச்னைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர்?
பாஜக அறிவித்துள்ளது போல், காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரை அறிவிக்குமா என்று கேட்டதற்கு, "மக்கள் கவலைப்படத் தேவையில்லை. உரிய நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்" என்றார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, "இதுகுறித்து நாங்கள் அறிவிப்போம். இதில் கட்சிதான் முடிவு எடுக்க முடியும். கட்சி உரிய நேரத்தில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும்" என்றார் சோனியா காந்தி.