Published : 22 Feb 2017 01:52 PM
Last Updated : 22 Feb 2017 01:52 PM

காற்று மாசினால் இந்தியாவில் மரணங்கள்: மறுப்பு வழியில் மத்திய அமைச்சகம்

இந்தியாவில் காற்றில் மாசடைதலும், அபாயகரமான கிருமி நுண் துகள் காற்றில் அதிகரித்துள்ளதும் மரணங்களை அதிகப்படுத்தியுள்ளது என்று சர்வதேச சுற்றுச்சூழல் ஆய்வுகள் எடுத்துரைப்பதை மறுக்கும் வழியில் செல்கிறது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்.

இது குறித்த அறிக்கை ஒன்றில் சர்வதேச அமைப்புகளின் அபாயமணியை, “எந்தவித அறிவியல் ஆதாரங்களுமற்ற ஊதிப்பெருக்கல்கள்” என்று கூறியுள்ளது.

இதனையடுத்து ‘உண்மையில்’ காற்றில் மாசடைதலால் ஏற்படும் சுகாதார விளைவுகளை கண்டறிய ஆய்வு நடத்தி மொத்தமாக அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது சுற்றுச்சூழல் அமைச்சகம்.

ஒன்று மதிப்புமிக்க லான்செட் அறிக்கை மற்றொன்று சுகாதார அளவையியல் மற்றும் மதிப்பீட்டுக்கான அமெரிக்க ஸ்தாபனத்தின் அறிக்கை, இந்த இரண்டிலும் மோசமான காற்றினால் இந்தியாவில் 2015-ல் 10 லட்சம் பேர் இறந்துள்ளதாக எச்சரித்தது.

இதனையடுத்து கேள்விகளை எதிர்கொண்டு வரும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் தவே, “இந்தியாவுக்கு வெளியேயிருந்து வரும் தகவல்கள் நம் மீது அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. நம்மிடமே இது குறித்து நிலவரங்களைக் கண்டறிய நிபுணர்கள் உள்ளனர். நம் ராணுவத்தை நம்புவதைப் போல் நான் இவர்களை நம்புகிறேன்.

சர்வதேச ஆய்வுகள் முக்கியமானவைதான் ஆனால் அதுதான் கடைசி வார்த்தை என்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. காற்றில் மாசடைதல் விவகாரத்தை கையாள்வது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல. ஏற்கெனவெ பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறோம், சாலைகளை சுத்தம் செய்து வருகிறோம், குப்பைகளை எரிப்பதை தடுத்து வருகிறோம், டீசல் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டைக் குறைத்துள்ளோம். இது ஒரு நீண்ட பயணமாகும்.

இந்தியாவின் தேசிய காற்றுத்தரநிலை கண்காணிப்புத் திட்டத்தின்படி, நுண் துகள்கள் மாறிவரும் நிலையில், சல்பர் டையாக்சைடின் இருப்பு கட்டுக்குள் உள்ளது” என்றார்.

புவிவெப்பமடைதல், வானிலை மாற்றம் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வுகளையும் இதே போல்தான் முன்பு மறுத்து வந்தனர். ஆனால் இப்போது அவை உண்மை என்று தெரியவந்துள்ளது, அதே போல் மறுப்பு என்பது இதிலும் அரசியல் ரீதியானதே என்றே பார்க்க வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x