

நிச்சயம் செய்தவரை விடுத்து வேறு பெண்ணை மணந்த மகாராஷ்டிர இளைஞர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.1.55 லட்சம் நஷ்ட ஈடு அளித்தார்.
மகராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த இளைஞர் சுஜை சாஹா. இவருக்கு அதே நகரில் வசிக்கும் பஞ்சாபி பெண்ணுடன் 2012-ல் திருமண நிச்சயம் செய்யப்பட்டடது. பெண்ணின் தந்தையான சந்திரசேகர் கோஹிலி, நிச்சயதார்த்தத்திற்கு பெரும் செலவில் ஏற்பாடுகள் செய்திருந்தார். இது முடிந்த மறுநாள் சந்திரசேகருக்கு போன் செய்த சுஜையின் வீட்டார், இந்த சம்பந்தத்தில் மாப்பிள்ளைக்கு இஷ்டம் இல்லை என்றும், அவர் வேறு பெண்ணை மணமுடிக்க இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தனது பெண்ணை சுஜை மோசடி செய்து விட்டதாக, காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதில் சுஜை மீது ஐபிசி 420 பிரிவில் வழக்குப் பதிவாகி இருந்தது. இதை விசாரணைக்கு ஏற்ற தானேவின் செஷன்ஸ் நீதிமன்றம், பிப்ரவரி 27, 2013-ல் நேரில் ஆஜராக வேண்டி சுஜைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதை பார்த்து கலங்கிய சுஜை தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதை அதன் நீதிபதி மறுத்து விட, சுஜை சார்பில் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டு வந்தது.
தற்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இதன் நீதிபதிகளான ஜே.எஸ்.கெஹர் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுஜை ஆஜராகி வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
அப்போது, பாதிக்கப்பட்டவர் நிச்சயதார்தத்தில் செய்த செலவான ரூ.1.55 லட்சம் தொகையை அளிக்க முன் வந்தார் சுஜை. இந்த நஷ்ட ஈடு தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சந்திரசேகர் ஏற்றுக் கொண்டதால், இத்துடன் சுஜை மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.