மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி

மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி
Updated on
1 min read

வங்கிகளிடத்தில் ரூ.9,000 கோடி கடன் நிலுவைத் தொகையை வைத்துள்ள மல்லையாவை நாட்டை விட்டு வெளியேற எப்படி அனுமதித்தீர்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

அதாவது, பிரதமரும் சரி, நிதியமைச்சரும் சரி தங்களது உரைகளில் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்காதது ஏன் என்ற கேள்வியையும் ராகுல் காந்தி எழுப்பினார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி கூறியபோது, “ரொட்டி திருடினால் அவரை அடித்து உதைத்து சிறையில் தள்ளுகிறோம். ஒரு பெரிய தொழிலதிபர் ரூ.9,000 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றியுள்ளார், அவர் முதல் வகுப்பில் தப்பிச் செல்ல நீங்கள் அனுமதித்துள்ளீர்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?

ரூ.9,000 கோடி தொகையை ஒருவர் திருடியுள்ளார், அவர் எப்படி நாட்டை விட்டு தப்பிச்சென்றார் என்பதையே நாங்கள் கேட்க விரும்புகிறோம். அவர் தப்பிச் செல்ல எப்படி நீங்கள் அனுமதித்தீர்கள்? இது சாதாரண கேள்வி, ஆனால் இதற்கு மோடியும் பதில் அளிக்கவில்லை, ஜேட்லியும் பதில் அளிக்கவில்லை. உங்கள் அரசு எதற்காக அவரை வெளிநாடு செல்ல அனுமதித்தது என்பதே அடிப்படைக் கேள்வி.

மத்திய அரசின் வரிக்கொள்கை பற்றி...

ஃபேர் அண்ட் லவ்லி திட்டங்கள் அனைத்தும் திருடர்களுக்கும், கருப்புச் சந்தை மற்றும் போதை மருந்து மாஃபியாக்களுக்கும் சாதகமாகவே முடியும். கருப்புப் பணத்தை வெள்ளையாக்க விரும்பும் எந்த ஒருவரும் மத்திய அரசின் வரிச்சலுகை திட்டங்களினால் பயனடைவர். இதைத்தான் இந்த நாடே கேட்கிறது, நான் மட்டும் கேட்கவில்லை, எதற்காக இவர்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்?

கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதி மொழி அளித்தீர்கள் ஆனால் 9,000 கோடியுடன் ஒருவரை தப்பிச் செல்ல அனுமதித்துள்ளீர்கள்.

மல்லையா இந்தியாவிலிருந்து ஓடியது எப்படி என்றுதான் ஜேட்லியிடம் நாங்கள் கேட்கிறோம். அவர் மீது நடவடிக்கை இருக்கிறது என்றால், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றால் மாநிலங்களவையில் அவருக்கு என்ன வேலை?

இவ்வாறு சரமாரியாகக் கேள்வி எழுப்பினார் ராகுல் காந்தி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in