

அரசு பஸ்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதி இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டசபைகளுக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது:
அரசு போக்குவரத்து கழகங்களின் பஸ்களில் தேர்தல் விளம்பரங்களை அனுமதித்தால் ஆளுங்கட்சியினர் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். விளம்பர அளவுகளின் இடத்தை அனைவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுப்பதும், மக்கள் நெரிசல் உள்ள பகுதிகள் வழியாகச் செல்லும் பஸ்கள் மற்ற பகுதிகளில் செல்லும் பஸ்கள் ஆகியவற்றை இனம் பிரித்து பார்ப்பதிலும் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதனால் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. எனவே அரசு பஸ்களில் தேர்தல் விளம்பரங்களை அனுமதிக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.