

உலகை தங்களது பயங்கரவாதத் தாக்குதல்களால் அச்சுறுத்தி வரும் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கான புதிய இராக் தூதர் ஃபக்ரி ஹசன் அல் இஸா எச்சரித்துள்ளார்.
அயல்நாட்டு நிதி உதவி பெறும் இஸ்லாமிய இறையியல் பள்ளிகள் மற்றும் மதபோதகர்கள் ஆகியோரின் செல்வாக்கினால் இஸ்லாத்தின் வேறொரு வியாக்யானம் தலைதூக்குகிறது. இதன் தாக்கங்களினால் இந்தியாவில் ஐஎஸ் ஸ்லீப்பர் செல்களை உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளது என்றார்.
எனவே இஸ்லாமிய இறையியல் பள்ளிகள் மற்றும் மதபோதகர்கள் எந்த வகையான இஸ்லாத்தினை போதிக்கின்றனர் என்பதை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
“இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் அயல்நாட்டு நிதிஉதவிகளுடன் நடைபெறும் இஸ்லாமிய இறையியல் கல்லூரிகள், பள்ளிகளில் ஒரு குறிப்பிட்ட இஸ்லாம் போதிக்கப்படுகிறது. இதுதான் ஐஎஸ் அமைப்பின் எழுச்சிக்கும் பரவலுக்கும் காரணமாகும்.
இம்மாதிரியான பயிற்சி ஐஎஸ் அமைப்பின் மீதான ஆதரவாளர்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் இத்தகைய இஸ்லாமியத்தை போதிக்கும் சக்திகள் உள்ளன, இயங்கி வருகின்றன என்பதை என்னால் கூற முடியும். இந்திய புதிய இஸ்லாமிய கொள்கைகள் அதன் பாரம்பரியமான மனிதநேய, சகிப்புத்தன்மை மரபுகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுள்ளது.
இஸ்லாமிய செமினரி மற்றும் தொலை மதப்பரப்புரையாளர்கள் ஆகியோர் ஐஎஸ் தொடுத்துள்ள போரில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் தான் இத்தகையோர் மீது நாடுகள் கண்காணிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
கடந்த ஜூலை 3-ம் தேதி இராக்கில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஃபக்ரி ஹசன் அல் இஸா தன் குடும்பத்தினரில் 4 பேரை இழந்தார். மேற்கு ஆசியா, மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் சக்தி வாய்ந்த உளவு அமைப்புகள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தீவிரவாத இளைஞர்களை தங்கள் போருக்காக பயன்படுத்துகிறது, இதனால் பாதிப்படைந்ததே இராக் மற்றும் சிரியாவாகும் என்கிறார் அவர்.
“மேற்கு ஆசியா உளவுத்துறையினரின் கைப்பாவையாக தாங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறியாமல் இந்த தீவிரவாத இளைஞர்கள் செயல்படுகின்றனர். தெற்காசிய நாடுகளில் தீவிரவாத சக்திகள் தங்கள் புகலிடங்களை உருவாக்கி வருகின்றன என்பதை மறுப்பதில் இனி எந்த வித பயனுமில்லை.
இந்தியாவில் சிகிச்சை பெற்று வரும் இராக் ராணுவ வீர்ர்கள் சார்பில் நாங்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.