

ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட்டுள் ளனர்.
கடந்த 2004 முதல் 2007 வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது அவர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த நேரத்தில் ஏர்செல் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2011 ஏப்ரலில் தொழிலதிபர் சிவசங்கரன் சிபிஐ-யில் புகார் செய்தார். அதே ஆண்டு அக்டோபரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
மேக்சிஸ் நிறுவனம் சார்பில் சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட், சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட் நிறுவனங்களுக்கு மொரிஷியஸ் வாயிலாக ரூ.742.58 கோடி கைமாறியிருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
2 வழக்குகள்
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணையைத் தொடங்கின. ஊழல் தொடர்பான குற்றச் சாட்டுகள் குறித்து சிபிஐ அமைப்பும் பண மோசடி குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தின. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடந்து வரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த இரு வழக்குகளின் விசாரணையும் நடைபெற்றது.
இரு வழக்குகளிலும் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் மற்றும் மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன.
அனைவரும் விடுதலை
பலமுறை தீர்ப்பு ஒத்திவைக் கப்பட்ட நிலையில் நீதிபதி ஓ.பி.சைனி நேற்று தீர்ப்பு வழங்கி னார். அவர் கூறியபோது, “2 வழக்கு களிலும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப் படுகின்றனர், இதேபோல வழக்கு களில் தொடர்புடைய நிறுவனங் களும் விடுவிக்கப்படுகின்றன’’ என்று தீர்ப்பளித்தார்.
அதன்படி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அனந்த கிருஷ்ணன் உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சன் குழும நிறுவனங்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
வாய்மை வென்றது: தயாநிதிமாறன்
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் வெளியிட்ட அறிக்கை: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் என்னையும் என் சதோதரர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறனையும் இணைத்து அடிப்படையற்ற ஒரு குற்றச்சாட்டின் பேரில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கு பழிவாங்கும் நோக்குடன் ஜோடிக்கப்பட்டது என்றாலும், இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தவுடன், நான் அன்று வகித்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன். நான் குற்றமற்றவன் என நிரூபிப்பேன் என்றும் தெரிவித்தேன். ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் துளி அளவும் உண்மை இல்லை. ஒருநாள் நீதி வென்றே தீரும் என்ற முழு நம்பிக்கையுடன் நாங்கள் இந்த வழக்குகளை சட்டப்படி சந்தித்தோம்.
நேர்மைக்கு வெற்றி நிச்சயம் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும், நீதித்துறையின் மீது நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையை நிலைநாட்டும் விதத்திலும் தீர்ப்பு வெளிவந்துள்ளது. வாய்மை வென்றது.