

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரயில்வே போர்ட்டர்களுடன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரிக்க பல்வேறு தரப்பினரின் கருத்துகளை ராகுல் காந்தி கேட்டறிந்து வருகிறார். இதற்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அவர் தலைநகர் டெல்லியில் ரயில்வே போர்ட்டர்களை சந்தித்துப் பேசினார்.
டெல்லி ரயில் நிலைய பிளாட் பாரத்தில் சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த கலந்துரையாடலின்போது ராகுல் பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளையும் காங்கிரஸ் கேட்டறிந்து வருகிறது. இதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும்.
நாட்டில் ஏழைகள், நடுத்தர வர்க்க மக்கள் என சுமார் 70 கோடி மக்கள் வெவ்வேறு பணிகள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை உரிமைகள் கிடைக்க வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும். அந்தவகையில் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன்.
தொழிலாளர்களின் உடல் நலனைப் பேணும் வகையில் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவேண்டும். பணியின்போது அவர்கள் காயமடைந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பெடுத்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற போர்ட்டர்கள், கேங்மேன்கள், இரவு பகல் பாராமல் தாங்கள் அதிக நேரம் உழைப்பதாகவும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.
அவற்றைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ராகுல் காந்தி உறுதியளித்தார். இதுவரை பெங்களூர், போபால், நாக்பூர், இம்பால் உள்ளிட்ட நகரங்களில் தொழிற்சங்க பிரதிநிதிகள், பழங்குடியின பெண்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார்.