

பாகிஸ்தான் உடனான விவகாரத்தில் ஹுரியத் கட்சியின் நிலை பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டை தவறாகப் புரிந்துகொள்ளவோ, தவறாக பிரதிநித்துவம் செய்யவோ இடமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறும்போது, “ஹுரியத்தின் பங்கு பற்றி இந்தியாவின் நிலைப்பாட்டை தவறாக புரிந்து கொள்வதற்கோ, தவறாக பிரதிநிதித்துவம் செய்வதற்கோ இடமில்லை.
நாங்கள் மீண்டும் வலியுறுத்துவது என்னவெனில் இந்திய - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகளில் 3-வது நபருக்கு இடமில்லை. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் தீர்மானம் ஆகியவற்றின் சட்டகத்தின் கீழ் ஏற்கெனவே நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண்பதே ஒரே வழி” என்றார்.
முன்னதாக, பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், பாகிஸ்தான் தேசிய நாள் கொண்டாட்டங்களுக்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை அழைப்பதற்கு இந்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காது என்று கூறி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.
அவர் கூறும்போது, “இந்திய அரசு ஆட்சேபிக்கும் என்று நான் கருதவில்லை. ஆனால் ஊடக நண்பர்களுக்கு என்ன கூற விரும்புகிறேன் என்றால் விவகாரம் இல்லாத ஒன்றை விவகாரமாக்கி விட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே தற்போது இந்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தைகளில் 3-வது நபருக்கு இடமில்லை என்று கூறியுள்ளது.