

தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த நக்சலைட் நயீமுதீன் போலீஸ் என்கவுன்ட்டரில் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்னாள் நக்சலைட்டு நயிமுதீன் உட்பட சிலர் சட்நகர் மில்லனியம் டவுன்ஷிப்பில் ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அப்பகுதியை போலீஸார் சுற்றி வளைத்தனர். போலீஸார் வருகையை அறிந்து கொண்ட நயிமுதீன் தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் நயிமுதீன் கொல்லப்பட்டார்.
நக்சலைட்டாக இருந்த நயிமுதீன் போலீஸில் சரணடைந்த பின்னர் ஒரு கும்பலை உருவாக்கி பணம் பறித்தல் போன்ற சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபட்டுவந்தார். ஐ.பி.எஸ். அதிகாரி கே.எஸ்.வியாஸ் கொலையில் தொடர்புடையவர். மேலும், நக்சலைட்டு தலைவர் கோனாபுரி ராமுலு, நக்சல் ஊக்கப் பாடகர் பெல்லி லலிதா ஆகியோர் கொலையிலும் தொடர்புடையவர்.
நயிமுதீனுடன் மேலும் ஒருவரும் கொல்லப்பட்டார். சம்பவ பகுதியை போலீஸார் சுற்றி வளைத்தனர். மேலும் நக்சலைட்டுகள் யாராவது பதுங்கியிருக்கின்றனரா என போலீஸார் தேடிவருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹபூப் நகர் எஸ்.பி. ரேமே ராஜேஸ்வரி உள்ளிட்டோர் சம்பவ பகுதியைப் பார்வையிட்டனர்.