

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்து மற்றுமொரு தீவிரவாதியின் உடலைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர். இதனால் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அங்கு சண்டை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்துப் பேசிய மூத்த காவல் அதிகாரி, புதிய கட்டிடத்தின் ஒவ்வோர் அறையாகச் சோதனையிட்ட போது, ஒரு தீவிரவாதியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். மற்றொரு என்கவுன்ட்டரில் பூஞ்ச் பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களோடு சேர்த்து கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 8 பேர் ஆவர்.
தீவிரவாதிகள் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். சப்-இன்ஸ்பெக்டர் காயமடைந்தார். அங்கு தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தரப்பில் மூவர் உயிரிழந்தனர்.
இதேபோல டாங்தர், குரூஸ் எல்லைப் பகுதிகளிலும் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டனர். அவற்றை ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.