Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM

தெலங்கானா விவகாரம்: ஆந்திரா செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தம்

தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திராவில் பல்வேறு பகுதிகளில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து ஆந்திர அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் இருந்து ஆந்திராவின் திருப்பதி, மந்திராலயம், அனந்தபூர், கர்னூல், கடப்பா, சித்தூர், நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 207 பஸ்களை இயக்கி வருகிறோம். திருப்பதிக்கு மட்டும் 65 பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்பதி உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால், மாலை 3 மணி வரை பஸ்கள் சீராக இயங்கவில்லை. மாலை 5 மணி முதல் எல்லா வழித்தடங்களிலும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘சீமாந்திராவில் நடக்கும் முழு அடைப்பு காரணமாக பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. தமிழக எல்லை வரை முழுமையாக இயக்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆந்திர எல்லையில் அவ்வப்போது மட்டுமே இயக்கப்படுகின்றன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x