

நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசில் பலம் மிக்க தலைமை தேவைப்படுகிறது என பாஜகவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி தெரிவித்தார்.
ரேவாரியில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற பேரணி, பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார். அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு பலம் வாய்ந்த தலைமை தேவைப்படுகிறது. இந்த ஆட்சியில் நிர்வாக குளறுபடிகள் ஏராளம். இந்த சிக்கலிலிருந்து நாடு விடுபடவேண்டும் என்றால் திறமையும் வலிமையும் மிக்க தலைமை அரசுக்குத் தேவை. அத்தகைய தலைவர் முன்னணியில் நின்று நிர்வாகத்தை நடத்தவேண்டும். நாடு வலிமை மிக்கதாக இருக்க, தில்லியில் பலம்வாய்ந்த அரசு அமைய, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். மேலும் தங்களது வாக்குரிமையை மறக்காதீர்கள்.
வாக்கு வங்கி அரசியல் நாட்டுக்கே சாபமாகிவிட்டது. வாக்கு வங்கி அரசியல் மூலமாக சமூகத்தைத் துண்டாக்க விரும்பும் அரசியல்வாதிகள், நமது ராணுவத்தைப் பார்த்து அங்கு காணப்படும் உண்மையான மதச்சார்பின்மையை கற்றுக்கொள்ளவேண்டும். பாகிஸ்தான், சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளுக்கு ராணுவத்தை குறை சொல்லமுடியாது. இந்த பிரச்சினைக்கு மத்திய அரசுதான் பொறுப்பு.. தில்லியில்தான் இதற்கு தீர்வு கண்டாகவேண்டும். எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 4 பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அதற்கு காரணமானவர்கள் பாகிஸ்தான் ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள் என உண்மையை மறைத்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி. எதிர்க்கட்சிகளின் அமளியை அடுத்தே, ஆகஸ்ட் 6ம் தேதி நிகழ்ந்த இந்த படுகொலைகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவு காரணம் என்கிற விளக்கத்தை கொடுத்தார் அந்தோனி.
அந்தோனி நாடாளுமன்றத்தில் சொன்னது நமது படை வீரர்களை வேதனைப்படுத்தி இருக்கும் என்பதில் என்ன சந்தேகம். தினந்தோறும் ஏதாவது பிரச்சினையை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தான் தனது கொடிய திட்டங்களை கைவிடவில்லை. சீனாவும் எல்லைக்குள் ஊடுருவி தனது பலத்தை பறைசாற்றி வருகிறது. பிரம்மபுத்ரா நதி நீரை இந்தியாவுக்குள் வராமல் தடுக்க அது முயற்சிக்கிறது. அருணாசலப்பிரதேசத்தை தனது அதிகாரத்துக்குள் கொண்டு செல்லப்பார்க்கிறது. தில்லியில் உள்ள ஆட்சியாளர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. தலைமை ஏற்பவர் அதற்குரிய திறமையைப் பெற்றவராக இருக்கவேண்டும். போர்த் தந்திரம் தெரிந்தவராக இருக்கவேண்டும். எதற்கும் முன்னணியில் நின்று வழி நடத்தவேண்டும்.
நாடு எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்றால் தேசப்பற்று மிக்க, மக்கள் நலனில் ஆர்வமிக்க, திறமைவாய்ந்த அரசு அமைய வேண்டும். இந்த கூட்டம், பேரணியே மாற்றத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பு என்றார் மோடி. இந்த நிகழ்ச்சியில் தரைப்படை முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங், ஏராளமான முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். சுமார் 60 நிமிடம் உரையாற்றினார் மோடி.
அண்டைநாடுகள் விஷயத்தில் பலவீனமான கொள்கைகளை கையாள்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. எல்லையில் ஊடுருவி சீனா தனது பலத்தை பறைசாற்றுகிறது. பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்கிறது. தனது சதித்திட்டங்களை அது கைவிடவில்லை.