

ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட பின் அந்த பொறுப்புக்கு வந்த சப்சார் அகமது பட் என்பவரையும் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். மற்றொரு என்கவுன்ட்டரில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்ப வங்கள் பரவி வருவதால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உடனடியாக அடைக்கப்பட்டன. இதனால் காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரில் மறைந்திருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி புர்ஹான் வானியை கடந்த ஆண்டு ஜூலை 8-ம் தேதி பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்து சுட்டுக் கொன்றனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரிவினைவாத அமைப்புகள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன. இதனால் பல மாதங்களாக காஷ்மீரில் வன்முறை நீடித்தது. இதைத்தொடர்ந்து ஹிஸ்புல் முஜாஹிதீன் புதிய தளபதியாக சப்சார் அகமது பட் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையில் தீவிரவாதிகள் பல்வேறு சதித் திட்டங்களை கட்டவிழ்க்க திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள சொய்மோ கிராமத்தில் சப்சார் உள்பட ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் முகாமிட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களை கண்டதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். நேற்று அதிகாலை வரை நீடித்த இந்த சண்டையின்போது ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சப்சார் அகமது பட் உள்ளிட்ட 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து காஷ்மீர் டிஜிபி வைத் கூறும்போது, ‘‘பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் சப்சார் மற்றும் பைசான் உயிரிழந்துவிட்டனர்’’ என்றார்.
இதேபோல் பாரமுல்லா மாவட்டத்தில், ராம்பூர் என்ற இடம் அருகே எல்லைக்கு அப்பால் இருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை எல்லை பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே சப்சார் அகமது பட் கொல்லப்பட்ட தகவல் பரவியதும் புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் மற்றும் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கனாபால் உள்பட தெற்கு காஷ்மீரில் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடை பெற்றன. அவர்களை பாதுகாப்புப் படையினர் விரட்டி அடித்தனர். எனினும் பீதியடைந்த பொதுமக்கள் பலர் அலுவலகங்களில் இருந்து அவசர மாக வீடு திரும்பினர். பள்ளி களும் முன்கூட்டியே மூடப்பட்டு மாணவர்கள் வீடு திரும்பினர். கடைகள், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. அசம்பாவித சம்ப வங்களை தடுக்க இணையதள சேவைகளும் முடக்கி வைக்கப்பட்டுள் ளன. இதனால் காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.