

உத்தர பிரதேச கிரிமினல்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ராஜா பய்யா என்றழைக்கப்படும் ரகுராஜ் பிரதாப் சிங், மீண்டும் அமைச்சரான ரகசியம் வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ் பதவி ஏற்றபோது ராஜா பய்யாவுக்கு உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு டி.எஸ்.பி. கொலை வழக்கில் சிக்கியதால் கடந்த மார்ச் 3-ல் அவர் பதவியை ராஜிநாமா செய்தார். இந்த வழக்கில் அவருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என சிபிஐ கைவிரித்தபோதும், மீண்டும் அவரை அமைச்சராக்க அகிலேஷ் தயங்கி வந்தார். அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
உணவு மற்றும் நுகர்வோர் துறையில் 2004 முதல் 2007 வரை ராஜா பய்யா அமைச்சராக இருந்தபோது, பொது விநியோகத்துக்கான உணவுப்பொருள்கள் மூன்று இடங்களில் பிடிபட்டன. இதில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ராஜா பய்யாவின் உதவியாளர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து சிபிஐ நடத்தி வரும் விசாரணையில் ராஜா பய்யாவும் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே அவரை அமைச்சரவையில் சேர்க்க அகிலேஷ் விரும்பவில்லை.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ராஜா பய்யாவிற்கு வலை வீசப்பட்டதாக் கூறப்படுகிறது. அந்தக் கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தாக்குர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அதே சமூகத்தைச் சேர்ந்த ராஜா பய்யா அவருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் மாநில மூத்த அமைச்சர் அசன்கான், ராஜா பய்யாவை அவரது வீட்டில் சந்தித்தார். அதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை ராஜா பய்யா மீண்டும் அமைச்சராகி விட்டார்.
யார் இந்த ராஜா பய்யா?
ராஜா பய்யா முதன்முறையாக 1993 சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார். அன்றுமுதல் கடைசி யாக நடந்த தேர்தல்வரை சுயேச்சையாகவே தொடர்ந்து வென்று வருகிறார். சுயேச்சையாக இருந்தாலும் அவரது ஆதரவன்றி உத்தரப் பிரதேசத்தில் அரசுகள் ஆட்சி செய்வது கடினம்.
கடந்த காலங்களில் பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைத்தபோது ராஜா பய்யாதான், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவைப் பெற்றுத் தந்தார் பகுஜன்சமாஜ்- பாஜக கூட்டணி ஆட்சியின்போது இவர் திடீரென ஆதரவை வாபஸ் பெற்றதால் அன்றைய முதல்வர் மாயாவதி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதன் காரணமாகவே மாயாவதி அடுத்து ஆட்சிக்கு வந்தபோது ராஜா பய்யா, அவரது தந்தை உதய் பிரதாப் சிங் ஆகியோரை 2002-ல் பொடா சட்டத்தில் கைது செய்தார். இதற்கு அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஏகே-47 துப்பாக்கி காரணம் காட்டப்பட்டது.
இதனால், 562 நாள்கள் சிறையில் இருந்த ராஜா பய்யா, அடுத்து வந்த முலாயம் சிங் ஆட்சியில் ஜாமீன் பெற்றதுடன் பொடா வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இத்துடன் அகிலேஷ் கடைசியாக பெரும் பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்த போதும் சுயேச்சை எம்எல்ஏவான ராஜா பய்யாவை உணவு, நுகர் வோர் மற்றும் சிறைத்துறை அமைச்ச ராக்கினார். இதனால், அவர் சிறையிலுள்ள தன் பழைய சகாக்களுக்கு சலுகை வழங்குவதாகப் புகார் எழுந்ததால் சிறைத் துறை பறிக்கப்பட்டது.
ராஜா பய்யா கிரிமினல் பின்னணி
உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் நடக்கும் பிரச்சினைகளை தீர்க்க பொதுமக்கள் காவல் நிலையத்தைவிட ராஜா பய்யாவையே அணுகின்றனர். அங்கு அவர் வைத்ததுதான் சட்டம். இவரது அரண்மனை வீட்டுக்கு பின்புறம் உள்ள குளத்தில் (பிறகு இதை மாயாவதி அரசுடமையாக்கி சுத்தம் செய்தபோது அதில் எலும்புக் கூடுகள் சிக்கின) முதலைகள் வளர்ப்பதாகவும், தன்னை எதிர்ப்பவர்களை இந்தக் குளத்தில் வீசி விடுவார் எனவும் பல்வேறு சர்ச்சைகள் உண்டு.
தனி விமானத்தால் சர்ச்சை
லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்றபோது பலமுறை வகுப்பு களுக்காக பிரதாப்கரிலிருந்து தனக்குச் சொந்தமான சிறிய ரக தனி விமானத்தில் வந்து இறங்குவார். பிறகு இதே விமானத்தை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியபோது அதில் கோளாறு ஏற்பட்டதால் நடுரோட்டில் இறக்கி பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சர்ச்சை களுக்கு சொந்தக்காரரான ராஜா பய்யா மீது தற்போது கொலை முயற்சி, திருட்டு, கொள்ளை உள்பட 8 கிரிமினல் வழக்குகள் உள்ளன.