Published : 18 Feb 2014 12:00 AM
Last Updated : 18 Feb 2014 12:00 AM

புதிய வரிகள் இல்லை: மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்

2014 ஜூலை மாதம் வரைக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.

அரிசி மீதான சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள், செல்போன் மற்றும் சோப்பு உள்ளிட்ட நுகர்வோர் பொருள்கள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் டி.வி., பிரிட்ஜ், கம்ப்யூட்டர்கள், பிரின்டர்கள், டிஜிட்டல் கேமரா, மைக்ரோவேவ் ஓவன், டி.வி.டி. பிளேயர்ஸ் ஆகிய வற்றின் மீதான உற்பத்தி வரி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இவற்றின் விலை குறையும். ரத்த வங்கிகள் மீதான 12 சதவீத சேவை வரி நீக்கப்பட்டுள்ளது.

வருமான வரியில் மாற்றம் இல்லை

வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும் ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் செல்வந்தர்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத கூடுதல் வரி இந்த ஆண்டும் தொடர்கிறது. ராணுவ வீரர்களின் ஊதிய முரண்பாட்டைக் களையும் வகையில் அவர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் கோரிக்கை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ராணுவத்துக்கான நிதி 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.2,24,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக் கடன் பெற்றுள்ள சுமார் 9 லட்சம் மாணவர்கள் பயன் அடையும் வகையில் ரூ.2600 கோடி வட்டித் தொகையை அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம்சாராத செலவினங்கள் ரூ.12,07,892 கோடியாக மதிப்பிடப் பட்டுள்ளது. இதில் உணவு, உரம், எரிபொருள் மானியத்துக்கு ரூ.2,46,397 கோடி.

பொருளாதார நிலை

பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் ப. சிதம்பரம் மேலும் கூறியதாவது:

2008 செப்டம்பர் முதல் சர்வதேச பொருளாதார நெருக்கடியால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சில நாடுகள் மட்டுமே கடும் பொருளாதார நெருக்கடியிலும் சீரான வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

எதிர்கால இலக்குகள்

விலைவாசி உயர்வு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, அதிக முதலீட்டை ஈர்ப்பது, உற்பத்தித் துறையை மேம்படுத்துவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். பெட்ரோலியம், எரிசக்தி, நிலக்கரி, நெடுஞ்சாலை, ஜவுளி துறைகளில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதும் அவசியமாகும்.

வேளாண் உற்பத்தி அபாரம்

வேளாண் துறையில் மகத்தான சாதனை படைத்துள்ளோம். ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி 4.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு உணவு தானிய உற்பத்தி 255.36 டன்னாக இருந்தது. நடப்பாண்டில் இது 263 டன்னாக உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நெருக்கடியிலும் இந்தியாவின் சேமிப்பு விகிதாச்சாரம் நடப்பாண்டில் 35.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுரங்கம், உற்பத்தித் துறைகளை தவிர இதர துறைகளில் முதலீடுகள் திருப்திகரமாக உள்ளன.

சர்வதேச வர்த்தகம் பெரும் சரிவைக் கண்டுள்ள போதிலும் இந்திய ஏற்றுமதி படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்திய ஏற்றுமதி 6.3 சதவீத வளர்ச்சியுடன் 326 பில்லியன் டாலரை தாண்டும் என்று நம்புகிறேன்.

பத்தாண்டில் 10 கோடி பேருக்கு வேலை

உற்பத்தித் துறை முதலீடு தொடர்ந்து கவலையளிப்பதாக உள்ளது. எனினும் இத்துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறையில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

சென்னை-பெங்களூர் தொழில் மேம்பாட்டு சாலை

சென்னை-பெங்களூர், பெங்களூர்- மும்பை, அமிர்தசரஸ்- கோல்கத்தா நகரங்களுக்கு இடையே தொழில் மேம்பாட்டு சாலைகள் அமைப்பதற்கான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. உருக்கு, சிமென்ட், சுத்திகரிப்பு, எரிசக்தி, எலக்ட்ரானிக்ஸ் துறைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உள்கட்டமைப்பு மேம்பாடு

நாட்டின் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தற்போது 29,350 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 3928 கி.மீ. தொலைவுக்கு புதிதாக தேசிய நெடுஞ்சாலை, 39,144 கி.மீ. தொலைவுக்கு ஊரகச் சாலைகள், 3343 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் 217.5 மில்லியன் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 புதிய விமான நிலையங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி

சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 2011-12 ஆண்டில் 7.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாகக் குறைந்தது.

எனினும் அரசின் தீவிர முயற்சியால் தற்போது 4.8 சதவீதமாக உள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் 5.2 சதவீதமாக உயரும்.

நிர்பயா நிதிக்கு கூடுதலாக ரூ.1000 கோடி

பெண்களின் பாதுகாப்புக் காக நிர்பயா நிதித் திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் ப. சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x