இதய சிகிச்சைக்கான ‘ஸ்டென்ட்’ சாதனத்துக்கு அதிக பணம் வசூல் 30 தனியார் மருத்துவமனைகள் மீது புகார்

இதய சிகிச்சைக்கான ‘ஸ்டென்ட்’ சாதனத்துக்கு அதிக பணம் வசூல் 30 தனியார் மருத்துவமனைகள் மீது புகார்
Updated on
1 min read

இதய சிகிச்சைக்கான ‘ஸ்டென்ட்’ சாதனத்துக்கு அரசு நிர்ணயித்த விலையை விட அதிகம் வசூலித்ததாக சுமார் 30 தனியார் மருத்துவமனைகள் மீது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் (என்பிபிஏ) புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதய நோயாளிகளுக்கு ரத்தக்குழாயில் உள்ள அடைப்பை நீக்குவதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ‘ஸ்டென்ட்’ என்ற சாதனம் பயன்படுத்தப்படுகிறது. இதன் விலையை சுமார் 85 சதவீதம் குறைத்து என்பிபிஏ நிர்ணயித்தது. சுமார் ஓராண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 13-ம் தேதி இந்த விலை நிர்ணயிக்கப்பட்டது.

தானாக கரைந்து விடும் மருந்து வகை ஸ்டென்ட் விலை ரூ.29,600 (பழைய விலை ரூ.40,000 முதல் 1.98 லட்சம் வரை) எனவும், உலோகத்தால் ஆன ஸ்டென்ட் விலை ரூ.7,600 (பழைய விலை ரூ.30,000 முதல் 75,000 வரை) என்றும் குறைக்கப்பட்டது. இதைவிட அதிக விலைக்கு விற்பனை செய்வோர், குறைந்த விலை என்பதால் ஸ்டாக் இல்லை என்று கூறுவோர் மீது என்பிபிஏ-விடம் புகார் அளிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் விலை நிர்ணயிக்கப்பட்ட சில நாட்களில் பல்வேறு மருத்துவமனைகள் அதிக தொகை பெற்றுக்கொண்டதாக என்பிபிஏ-விடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. புதுடெல்லி, ஹரியாணா, உ.பி., உத்தராகண்ட், மகராஷ்டிரா, பஞ்சாப், ம.பி. ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்த மருத்துவமனைகளில் பல பிரபல மருத்துவமனைகளும் இடம் பெற்றுள்ளன. புகார் வரப்பெற்ற மருத்துவமனைகளின் பெயர் மற்றும் முகவரி என்பிபிஏ-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இப்புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் அளித்த ரசீதுகளுக்காக என்பிபிஏ காத்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சில மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்டென்ட் சாதனம் கடந்த ஜூலை மாதம் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் மத்திய அரசால் சேர்க்கப்பட்டது. இதனால் அவை டிசம்பர் 2013-ல் மருந்து விலை நிர்ணயப் பட்டியல் 1-லும் சேர்க்கப்பட்டு அதன் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஸ்டென்ட் தயாரிக்கும் மருந்து நிறுவனங்களும், அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வோரும் அரசு நிர்ணயித்த விலை அல்லது அதற்கு குறைவாகவே விற்பனை செய்வது கட்டாயம் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in