

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க நாடாளுமன்ற குழுவை அமைக்க வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி எம்.பி. வலி யுறுத்தியுள்ளார்.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனை தருமபுரி தொகுதி எம்.பி. அன்புமணி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விளக்கினார். மேலும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து சபா நாயகரிடம் அவர் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும். தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு, தடை விதிக்க
வேண்டும். தேர்தல் பணி முழுவ திலும் வெளிமாநில அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும். ஆளும்கட்சியினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தவிர்க்க தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நாள் முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
இத்தகைய தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளை அளிக்க நாடாளுமன்ற குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மக்களவை, மாநிலங்களவை செயலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு பதில் அளிப்பதாக தெரிவித்தார்.
பாலாறு பிரச்சினை
பாலாறு பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் அன்புமணி சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது: பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளது. கூடுதலாக 7 தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. 5 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். தடுப்பணை விவகாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் இருந்தோ, தமிழக அரசிடமோ ஆந்திர அரசு எவ்வித அனுமதியும் பெறவில்லை.
இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரி னேன். இதில் சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
கல்விக் கடன் விவகாரத்தில் அரசு வங்கிகள் வெளிஆட்கள் மூலம் கடன்வசூலில் ஈடுபடக்கூடாது, ஏழை மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
தேர்தல் சீர்திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைக்க நாடாளுமன்ற குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.