

சரக்கு மற்றும் சேவை வரிக்கு (ஜிஎஸ்டி) அதிமுக மறைமுக ஆதரவு அளிப்பதாக மாநிலங் களவை திமுக தலைவர் கனிமொழி புகார் கூறியுள்ளார். கடந்த வாரம் முடிந்த நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் குறித்து ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் அவர் இதை தெரிவித்தார். அவரது கருத்துகள் வருமாறு:
நடந்து முடிந்த மழைக்காலக் கூட்டத் தொடர் மக்களுக்கு பய னுள்ளதாக இருந்ததாகக் கூற முடியுமா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிக நாட்கள் செயல்பட்ட கூட்டத் தொடர் என்று இதைத்தான் கூற முடியும். அதிக கேள்விகளுக்கு பதில் சொல்லப்பட்டுள்ளது. எனவே ஓரளவு பயனுள்ள கூட்டத் தொடராகவே இதைக் கருதலாம்.
தமிழகப் பிரச்சினைகளை திட்டமிட்டபடி இந்தமுறை எழுப்ப முடிந்ததா?
ஓரளவுதான் எழுப்ப முடிந்தது. புதிய கல்விக்கொள்கை மீதான விவாதத்தில் பேசுவோர் பட்டியலில் எனது பெயர் இருந்தாலும் எனக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இந்தக் கொள்கை மீது தமிழக மக்களுக்கு உள்ள அச்சங்களை போக்க மத்திய கல்வி அமைச்சர் தவறி விட்டார். உறுப்பினர்களின் புகார்களுக்கும் பதில் சொல்ல வில்லை. தமிழகத்தில் கெயில் எரிவாய் குழாய் விவகாரத்தை பூஜ்ஜிய நேரத்தில் எழுப்ப முயன் றோம். ஆனால் இதை சிறப்பு கவன ஈர்ப்பில் தான் கொண்டு வர முடிந்தது. ஆந்திராவில் தமிழர்கள் கைது செய்யப்பட்டது, கொடைக்கானல் மெர்குரி தொழிற் சாலை கழிவுப் பிரச்சினை போன் றவை குறித்து பேச முயன்றபோது வாய்ப்பளிக்கப்படவில்லை.
ஜிஎஸ்டி மசோதாவை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்த நிலையில், திமுக மட்டும் ஆதரவு அளித்தது ஏன்?
ஜிஎஸ்டியை அதிமுக எதிர்ப்பது உண்மையானால் அதை எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் அதிமுக வெளிநடப்பு செய்தது. இதற்கு ஜிஎஸ்டி மசோதாவை அவர்கள் மறைமுகமாக ஆதரிப்பதாகவே அர்த்தமாகும். ஆனால் நாங்கள் ஜிஎஸ்டிக்கு எதிராக வாக்களிக்க வில்லை. ஏனெனில் இதன் மீதான மாநிலங்களவை குழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். அப்போது என்னிடம் பல வணிகர்கள் கூறிய கருத்துகளின்படி இந்த மசோதா வில் அவர்களுக்கு சாதகமான அம்சங்களும் உள்ளன. தொலை நோக்குப் பார்வையில் நாடு முழு வதுக்கும் இது பலன் அளிக்கும் எனவும் தெரிந்தது. மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஏற்க வேண்டும் எனக் கோரியிருந்தோம். இது ஏற்கப்பட்டதன் அடிப்படையில் மசோதாவை ஆதரித்தோம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இது மிகவும் அமளி குறைந்த கூட்டத்தொடர் எனக் கூற முடியுமா?
இந்தமுறை பல விவாதங்கள் அனுமதிக்கப்படும் சூழல் நிலவி யது. இதனால் அமளி ஏற்படும் வாய்ப்புகளும் இல்லாமல் போனது. குறிப்பாக குஜராத்தில் தலித் தாக்கப்பட்டது, காஷ்மீர் பிரச்சினை போன்றவை மிகவும் முக்கியமானவை. இவற்றை எழுப்ப அனுமதிக்கப்பட்ட போக்கு வரவேற்கத்தக்கது. வரும் கூட்டத் தொடர்களிலும் இது தொடர வேண்டும்.
கடந்த ஆட்சியில் பாஜக செய்த அமளிக்கும் இந்த ஆட்சியில் காங்கிரஸ் செய்யும் அமளிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பில் முன்னேற்றம் உள்ளது. இத்துடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை நடத்த விடுவதிலும் எதிர்க்கட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவையை முடக்குவதே குறிக்கோள் என்றில்லாமல் தங்கள் விவாதங்களை முன்வைப்பதில் அதிக முனைப்பு தெரிகிறது.
மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பயன்படுத்தி வருவதாகக் கருதுகிறீர்களா?
அவர்கள் ‘அம்மா’ புகழ்பாடுவதிலும் அதிமுக அரசின் சாதனை கள் என பட்டியலிடுவதிலும் காட்டும் அக்கறையை, மக்களின் உண்மையானப் பிரச்சினைகளை முன்வைப்பதில் காட்டுவதில்லை. உதாரணமாக, குழந்தைத் தொழிலாளர் மசோதா விவாதத்தில் அவர்கள், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை என்று பதிவு செய்கிறார்கள். இந்த மசோதாவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல் பேசுவது, தமிழக மக்களுக்கு கெடுதலானது.
நாட்டின் மற்ற பகுதிகளின் பிரச்சினைகள் குறித்த விவாதத் தில் நாங்கள் அதேபோன்று, தமிழகத்திலும் நடைபெறுவதையும் குறிப்பிட்டால் அவர்கள் குறுக்கிடுகிறார்கள். தமிழக அரசின் மீது புகார் கூறாமல் மக்கள் பிரச்சினையை மட்டும் பேசினாலும், அதுபோல் எதுவுமே தமிழகத்தில் நடைபெறவில்லை என பதிவு செய்வதில் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். இத னால் தமிழக மக்களின் பிரச்சினை களுக்கு தீர்வு கிடைக்காமல் போய் விடுகிறது.