

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நீட் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளதால் இப்போதைக்கு இந்த மனுவை விசாரிக்க முடியாது என கூறி அடுத்த வாரத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தது.
சங்கல்ப் தொண்டு நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில், மே 7-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே விசாரணை நடத்தி வருகிறது. மேலும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடையும் விதித்துள்ளது. அதனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அடுத்த வாரம் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும் மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் பதிலளித்தது.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுகள் தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கொள்கை விளக்க அறிக்கையை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.