Last Updated : 06 Sep, 2016 10:40 AM

 

Published : 06 Sep 2016 10:40 AM
Last Updated : 06 Sep 2016 10:40 AM

காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: கர்நாடகாவின் மாண்டியாவில் முழு அடைப்பு

செப்.8 வரை மாண்டியா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டியாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செப்டம்பர் 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் விவசாய சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.இதனால், அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் எல்லைப் பகுதியான ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ் திரைப்படங்களைத் திரையிடும் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாண்டியாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 8-ம் தேதி வரை (வியாழக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தையச் செய்திப் பதிவு:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் மாண்டியாவில் விவசாய சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூர் அருகே உள்ள மாண்டியாவில் கர்நாடகத்தைச் சார்ந்த விவசாய சங்கங்கள், கரும்பு விவசாயிகள் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

விஸ்வேஸ்ரய்யா சிலை அருகே பேரணியாய் திரண்டு மாண்டியா ஆட்சியர் அலுவலத்துக்கு செல்வதாக போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், பெங்களுர் - மைசூர் நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில், அமைதியாக முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சத்திய மங்கமலம் - சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழக எல்லையில் தமிழக அரசின் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சி உள்ளிட்ட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த உள்ளார்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், கர்நாடகாவைச் சார்ந்த மத்திய அமைச்சர்கள், கர்நாடக மாநில எம்.பி.க்கள் கலந்துகொள்கின்றனர்.

இதனிடையே, "கர்நாடகாவின் 4 அணைகளில் மொத்தம் 51 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது எங்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து எங்கள் வழக்கறிஞர்களுடன் பேசி அவர்களின் ஆ‌லோசனையை பெற்ற பிறகு நீர்வள அமைச்சகத்தின் கருத்தையும் பெற உள்ளோம்" என்றார் கர்நாடக அமைச்சர் ஜெயச்சந்திரா.

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னதாக, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உடனடியாக 50 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, நல்லெண்ண அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீரை விடுவிக்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு வெள்ளிக்கிழமை அறிவுரை வழங்கியிருந்தனர்.

தமிழக அரசின் மனு மீதான விசாரணை மீண்டும் வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை பாதுகாக்க ஏதுவாக உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், டெல்டா பாசன விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடக மாநில அரசு, தமிழகத்துக்கு காவிரியில் அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு காவிரி கண்காணிப்புக் குழுவை 3 நாட்களில் அணுகி, கர்நாடக அரசு தண்ணீர் விடுவிப்பதை உறுதி செய்துகொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x