

டெல்லியில் ரசாயன வாயு கசிந்ததில், 450-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மயக்கம் அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தள்ளது.
டெல்லியின் தென் கிழக்குப் பகுதி யில் உள்ள துக்ளகாபாத் பகுதியில், ராணி ஜான்சி பள்ளி மற்றும் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி ஆகியவை அருகருகே இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளின் அருகில் கன்டெய்னர் கிடங்கு உள்ளது. இந்நிலையில் நேற்று காலை கிடங்கில் இருந்த கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிந்ததாகக் கூறப்படு கிறது. பள்ளிகள் இருந்த பகுதியிலும் ரசாயன வாயு காற்றில் வேகமாகப் பரவியது.
இதில் 2 பள்ளிகளிலும் இருந்த மாணவிகளுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. சிலர் வாந்தி எடுத்தனர். சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய அரசு நடத்தி வரும் அனைத்து மருத்துவமனைகளிலும் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
அதன்பின் உடனடியாக மாணவிகளை மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாணவிகள் பலர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், மஜிதியா மருத்துவமனையில் 107 மாணவிகள், பத்ரா மருத்துவமனையில் 62 மாணவிகள் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மூச்சுத்திணறல் அதிகமாக காணப்பட்ட 2 மாணவிகள், பத்ரா மருத்துவமனை குழந்தைகள் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரசாயன கசிவையடுத்து பள்ளி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ரசாயன வாயு கசிவு குறித்து தீவிர விசாரணை நடத்த டெல்லி துணை முதல்வரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார். போலீஸாரும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஆளுநர் அனில் பைஜால், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்திர குப்தா ஆகியோர் மருத்துவ மனைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்தனர்.