Published : 12 Nov 2013 10:00 AM
Last Updated : 12 Nov 2013 10:00 AM

மோடி - ராகுல் விமர்சனங்கள் நாராசமாக ஒலிக்கின்றன: யெச்சூரி

நரேந்திர மோடி, ராகுல் காந்தி தெரிவிக்கும் விமர்சனங்கள் நாராசமாக ஒலிக்கின்றன என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

ஆளுமைகளின் அடிப்படையில் இல்லாமல் பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்திய பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பின் சார்பில் நிகழ்ந்த கூட்டமொன்றில் யெச்சூரி கூறியதாவது:

“பிரச்சினைகள் அடிப்படையில் அல்லாமல் விமர்சனங்களின் அடிப்படையில் நமோ (NaMo) ராகா (RaGa) ஒலிக்கிறது. இந்த ராகம் இசையாக இல்லாமல் நாராசமாக ஒலிக்கிறது.

ஆளுமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அடுத்த தேர்தலில் எங்களின் கோஷம், ‘புதிய தலைவர் வேண்டாம், புதிய கொள்கையே தேவை’ என்பதாக இருக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த கலவரத்தை தடுக்கும் விவகாரத்தில் மாநில சமாஜவாதி அரசின் செயல் பாடுகளில் எங்களுக்கு திருப்தியில்லை. இதை, மதச்சார்பற்ற கட்சிகள் பங்கேற்ற மாநாட்டில், அவர்களிடம் (சமாஜவாதி கட்சித் தலைவர்கள்) தெரிவித்தோம்.

முஸாபர்நகர் கலவரம், குஜராத் கலவரம், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப் பட்டுள்ளது ஆகியவை அனைத்தும் மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி என்றே நாங்கள் கருதுகிறோம்.

சர்தார் படேலின் சிறப்புகளை பாஜக, ஆர்.எஸ்.எஸ். பேசி வருவதன் நோக்கம் சுதந்திரப் போராட்டத்தில் தங்களுக்கும் பங்குள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகத்தான்.

நாட்டுக்கு இப்போது தேவை மாற்றுக் கொள்கைதான். கொள்கை அடிப்படையில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே வேறுபாடு இல்லை. மாற்றுக் கொள்கை இருந்தால்தான் மக்களுக்கு தேவையானதை செய்ய முடியும்.

தேர்தலுக்கு பிந்தைய அரசு, பொருளாதார ரீதியாக நிவாரணத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வளர்ச்சி என்ற பெயரில் இந்த நாட்டின் அபரிமிதமான வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையாக அளிக்கப்படுகிறது. மாற்றுக் கொள்கையை கடைப்பிடிக்க காங்கிரஸும் பாஜகவும் விரும்பவில்லை.

பல ஆண்டுகளாக மத்தியில் கூட்டணி ஆட்சிதான் இருந்து வருகிறது. கருத்துக் கணிப்புகளை நான் நம்பாத போதும், இப்போதைய கருத்துக் கணிப்புகள், மற்றவை பிரிவைச் சேர்ந்த கட்சிகள் (ஆளும், பிரதான எதிர்க்கட்சி சாராதவை) அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ராகுல் காந்திக்கு நல்ல நோக்கம் உள்ளது. ஆனால், அதை எப்படி செயல்படுத்துவார், எவ்வாறு செயல்படுத்த விரும்புகிறார் என்பது குறித்து அவர் உரிய முறையில் தெரிவிக்கவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சியில் இடதுசாரிகள் ஆதரவு அளித்தபோதுதான், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்கக் கூடாது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால், அதற்கு முடிவேயில்லாமல் போய்விடும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வளரும் நாடுகளுக்கு உதவும் வகையில் வெளியுறவுக் கொள்கையை இந்தியா வகுக்க வேண்டும்.

அமெரிக்க உளவுத்துறை (என்.எஸ்.ஏ.) பிற நாடுகளை உளவு பார்த்த விவகாரத்தில் இந்தியா அமைதியாக இருந்தது ஏன்?” என்றார் சீதாராம் யெச்சூரி.- பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x