

மணிப்பூர் மாநிலத்தில் வரும் மார்ச் 4, 8-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதை யொட்டி ஆளும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
மாநில துணை முதல்வர் கைகான்காம் நேற்று தமங்லாங் மாவட்டம், கோபூம் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புப் படையினர் கார்களில் சென்றனர்.
நம்காலாங் என்ற இடத்தில் துணை முதல்வரின் கார் வந்த போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் அவரின் காரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் தினேஷ் என்ற போலீஸ்காரர் காயமடைந்தார். இதேபோல மற்றொரு இடத்திலும் துணை முதல்வரின் காரை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். எனினும் இத்தாக்குதல்களில் இருந்து அவர் உயிர்தப்பினார்.
திட்டமிட்டபடி கோபூம் பொதுக்கூட்டத்தில் கைகான்காம் பேசினார். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.