Published : 07 Oct 2014 04:43 PM
Last Updated : 07 Oct 2014 04:43 PM

கழிவறை விழிப்புணர்வு- பிரதமர் மோடியின் பிரச்சாரத்துக்கு பில் கேட்ஸ் பாராட்டு

கழிவறை அவசியம் குறித்து பிரதமர் மோடிக்கு மேலாக வேறு எந்த இந்திய பிரதமரும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறினார்.

கடந்த மாதம் இந்தியா வந்திருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டாவும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அவர்கள் இருவரும் இணைந்து நடத்திவரும் பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் முயற்சிகள் தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் மோடியுடன் அவர்கள் ஆலோசித்தனர்.

இந்த நிலையில் தனது இணையதளத்தில் பிரதமர் மோடி உடன் பேசியது குறித்து பில் கேட்ஸ் விவரித்துள்ளார்.

'இம்ப்ரெஷன்ஸ் ஆஃப் இந்தியா' என்ற தலைப்பில் அவர் தெரிவித்ததாவது: "உலகம் முழுவதிலும் சுமார் 2.5 கோடி மக்கள் கழிவறை வசதி இல்லாமல் வாழ்கின்றனர். இந்தியாவில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும் அங்கும் பல கிராமங்களில் இந்த அவலம் நீடிக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்பு மிகவும் மோசமானது, பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தக்கூடியது.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா வந்தபோது அவரது சிறப்பாக, கருப்புப் பணத்தை மீட்பதில் உறுதி, பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் முன்னேற்ற நடவடிக்கை என பலவற்றை குறிப்பிட்டு 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை எழுதி இருந்தது. ஆனால் என்னை பொறுத்தவரையில், இந்தியா சுதந்திரம் பெற்றது முதல், கழிப்பறை அமைப்பது குறித்து நரேந்திர மோடியை விட சிறப்பான பிரச்சார நடவடிக்கைகளை வேறு எந்த இந்திய பிரதமர்களும் மேற்கொண்டதில்லை.

இந்திய மக்கள் கழிவறையின் அவசியம் குறித்து சிந்திக்கவும், அவர்கள் அது குறித்து பேசவும் மோடி வைத்துள்ளார் என்றால் அது தான் அவரது வெற்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x