

எல்லையில் 2016-ல் பாகிஸ்தான் 449 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் நேற்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கும் சதிச்செயலுக்கும் ஆதரவு அளித்து வருகிறது. கடந்த 2016-ல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் 228 முறையும் சர்வதேச எல்லையில் 221 முறையும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 13 பேர் இறந்தனர். 83 பேர் காயம் அடைந்தனர். ராணுவத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் இறந்தனர். 74 பேர் காயம் அடைந்தனர். பிஎஸ்எப் தரப்பில் 5 வீரர்கள் இறந்தனர். 25 பேர் காயம் அடைந்தனர்.
2017-ல் கடந்த பிப்ரவரி வரை பாகிஸ்தான் தரப்பில் 28 முறை அத்துமீறி தாக்குதல் நடத் தப்பட்டுள்ளது. எல்லையின் புனி தத்தை காக்கவும் சண்டை நிறுத்த உடன்பாட்டை கடைபிடிக்கவும் தூதரக ரீதியில் பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
மற்றொரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், “தீவிரவாதி களின் சட்டவிரோத தொலைபேசி உரையாடல்கள் சில, பயங்கரவாத எதிர்ப்பு படையினரால் கண்டறியப் பட்டுள்ளது. இன்டெர்நெட் மூலம் பேசப்படும் தொலைதூர சர்வதேச உரையாடல்கள் சிலவும் கண்ட றியப்பட்டுள்ளது” என்றார்.