Last Updated : 09 Jun, 2017 10:14 AM

 

Published : 09 Jun 2017 10:14 AM
Last Updated : 09 Jun 2017 10:14 AM

சென்னை பல்கலை. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்பில் தரம் குறைவதாக புகார்: மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்

சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் கருத்து கேட்ட பிறகு இது தொடர்பாக மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கவுள்ளது.

இது தொடர்பாக யுஜிசி கடந்த வாரம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. இதில் மாணவர் சேர்க்கை, தன்னாட்சி அதிகாரம், வெளிநாட்டு கல்வி நிறுவனங் களுடன் ஒப்பந்தம் ஆகியவை தொடர்பாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான புதிய வரைவு விதிகளை வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ‘நாக்’ எனப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் அமைக்கப்பட்டது. இது நாட்டின் 50 சிறந்த பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த ரேங்க் அடிப்படை யில் அனைத்து பல்கலைக் கழகங்களையும் 1, 2, 3 என மூன்று வகையாக யுஜிசி பிரித்துள்ளது. நாக் குழுவின் 3.5 புள்ளிகள் (ஏ ப்ளஸ் ரேங்க்) பெற்றவை பிரிவு 1-லும், 3.01 முதல் 3.49 புள்ளிகள் பெற்றவை பிரிவு 2-லும் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய பல்கலைக்கழகங்கள் பிரிவு 3-ல் சேர்க்கப்பட்டு, இவற்றின் ஆய்வு மாணவர் சேர்க்கை தொடர்பான உரிமை பறிபோகும் நிலையில் உள்ளது.

இதில், மிகவும் பழமையான கல்வி நிலையங்களான குவாஹாட்டி, உத்கல், ராஞ்சி, புனே, மும்பை மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களும் இடம் பெற்றுள்ளன. மத்திய பல்கலைக்கழகங்களில் கர்நாடகா, குஜராத் மற்றும் கொரப்பேட் பல்கலைக்கழகங்களும் பிரிவு 3-ல் தள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஆய்வுப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்க முடியாது. மாறாக ஆசிரியர் பணி தகுதித் தேர்வுகளான ‘நெட்’ (தேசிய தகுதித் தேர்வு) அல்லது ‘ஸ்லெட்’ (மாநில அளவிலான தகுதித் தேர்வு) தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே சேர்க்க முடியும்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் யுஜிசி வட்டாரம் கூறும்போது, “மத்திய பல்கலைக்கழகங்களில் ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,000 வீதம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றில் தகுதி மற்றும் திறமை அற்றவர்களும் ஆய்வு மாணவர்களாக சேர்க்கப்பட்டு விடுகின்றனர். நாடு முழுவதிலும் பெரும்பாலான மாணவர்களின் ஆய்வுகள் தரம் குறைந்து காணப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. எனவே அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கவும், ஆய்வுக்கு திறமையானவர்களை மட்டும் சேர்க்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

நாடு முழுவதிலும் மத்திய, மாநில அரசுகள் சார்பிலும் தனியார் சார்பிலும் சுமார் 800 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் மத்திய பல்கலைக் கழகங்கள் நாடாளுமன்ற சட்டம் மூலமும், மாநில பல்கலைக் கழகங்கள் சட்டப்பேரவை சட்டங் களின் மூலமும் செயல்படுகின்றன. தனியார் பல்கலைக்கழகங்கள் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அனுமதியின் கீழ் அமைக்கப்படுகின்றன. இவை அனைத்திலும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இவற்றில் 700-க்கும் மேற் பட்டவை தற்போது யுஜிசியால் பிரிவு 3-ல் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் நெட் மற்றும் ஸ்லெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே சேர்க்கை எனும்போது பல ஆயிரம் இடங்கள் பூர்த்தியாக வாய்ப்பில்லை. இதனால், பல்கலைக்கழகங்கள் தங்களின் தன்னாட்சி உரிமை பறிக்கப்படுவதாகக் கருதினால் அவை ‘நாக்’ குழுவின் ரேங்க் பெறும் வகையில் தங்கள் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் என்ற நிலை உருவாக்கப்பட உள்ளது. யுஜிசி வெளியிட்டுள்ள வரைவு விதிகள் குறித்து ஜூன் 15-ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x