Last Updated : 11 Aug, 2016 05:13 PM

 

Published : 11 Aug 2016 05:13 PM
Last Updated : 11 Aug 2016 05:13 PM

ஜாகிர் நாயக் நடவடிக்கைகள் நாட்டு நலனுக்கு எதிரானவை: மத்திய அமைச்சர் நக்வி பேட்டி

‘இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் நடவடிக்கைகள் நாட்டு நலனுக்கு எதிராக உள்ளன’ என்று, மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் தாகா உணவகத்தில் 22 பேரைக் கொன்ற தீவிரவாதிகளில் இருவர், இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கின் உரையால் கவரப்பட்டவர்கள் என்ற தகவல் வெளியானதை அடுத்து, மத்திய அரசு அவரை கூர்ந்து கண்காணிக்கத் தொடங்கியது.

ஜாகிர் நாயக்குக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் அவரின் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் குறித்து, மகாராஷ்டிரா மாநில அரசிடம் மும்பை போலீஸார் ஏற்கெனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் இருந்து, ஜாகிர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குக்கு, ரூ. 60 கோடி அனுப்பப்பட்டுள்ளது குறித்தும், மும்பை போலீஸார் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையொட்டி, ஜாகிர் நாயக்கின் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் ‘இஸ்லாமிக் ரிசர்வ் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் அவர் நடத்திவரும் என்ஜிஓ அமைப்பின் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘ஜாகிர் நாயக்கின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் விதத்திலும், சர்ச்சைக்குரிய வகையிலும் உள்ளன.

அவரின் நடவடிக்கைகள் நாட்டு நலனுக்கு எதிராக உள்ளன. புலனாய்வு அமைப்புகள் இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்திவருகின்றன. அவரின் மர்மமான செயல்பாடுகள் குறித்த உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வரும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x