

மேற்குவங்க மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் குற்றவாளிகளால் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் மத்தியகிராம் பகுதியைச் சேர்ந்த16 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதியன்று ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் கொடுத்துவிட்டு திரும்பும் போது மீண்டும் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மத்தியகிராம் பகுதியை விடுத்து டம்டம் பகுதிக்கு குடியேறினர்.
இதற்கிடையில் மத்தியகிராம் பகுதி மக்கள் கொடுத்த நெருக்கடியின் பேரில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் 23-ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் புதிய வசிப்பிடத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர், வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. அன்றைய தினமே அந்தப் பெண் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னை பலாத்காரம் செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் தன் மீது தீ வைத்ததாக தெரிவித்தார். அந்தப் பெண்ணின் பெற்றோரும், மாநிலத்தை விட்டே தாங்கள் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என போலீசார் நெருக்கடி அளித்ததாக கூறினர்.
இந்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பெண் கடந்த 31-ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த வழக்கில் 2 பெர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் பெண் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் அரசு மெத்தனம் காட்டவில்லை என்று விளக்கமளித்துள்ளது.