

தலித் இளைஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து குஜராத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நீதி கோரி காங்கிரஸ் பிரமுகர் உட்பட 7 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது.
குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்கெனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியது. மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
கடந்த 11-ம் தேதி தலித் இளைஞர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் வலுத்துள்ளன.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு குஜராத் மாநில அரசுப் பேருந்துகள் கோண்டால் பகுதியில் தீக்கிரையாக்கப்பட்டன. அதுதவிர தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுரேந்திரநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாட்டுத் தோல்களை குவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்கொலை முயற்சி:
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி உள்ளூர் பிரமுகர் அனில் மதாத் உள்ளிட்ட 7 பேர் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டனர்.
தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு முன்வந்துள்ளது. ஆனால், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை கோரி போராட்டங்கள் தொடர்கின்றன.
தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடமையை செய்யாத குற்றத்துக்காக ஓர் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விரைவாக விசாரிக்கப்பட்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார்.