Last Updated : 25 May, 2017 04:42 PM

 

Published : 25 May 2017 04:42 PM
Last Updated : 25 May 2017 04:42 PM

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவரின் இனிய குரலால் கவரப்பட்டு, அவரையே திருமணம் செய்த சிசிடிவி ஆபரேட்டர்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவரின் இனிய குரலால் கவரப்பட்டு, அவரையே திருமணம் செய்துகொண்டிருக்கிறார் சிசிடிவி ஆபரேட்டர் ஒருவர். இவர்களின் திருமணம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மும்பையில் நடந்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்னதாக தவறுதலாக ஒருவருக்கு போன் செய்யாமல் இருந்திருந்தால், தனக்கான மணமகனை இன்னும் தேடிக் கொண்டே இருந்திருப்பார் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லலிதா பன்சி.

இதுகுறித்துப் பேசிய 27 வயது மணமகன் ரவி ஷங்கர் சிங், ''மூன்று மாதங்களுக்கு முன்னதாக தவறுதலாக எனக்கு போன் செய்தார் லலிதா. நானும் அதைக் கவனிக்கவில்லை. 15 நாட்கள் கழித்து அவரைத் திரும்பக் கூப்பிட்டேன். இருவரும் பேசினோம், பேசினோம்.. பேசிக்கொண்டே இருந்தோம். அவரின் இனிய குரலில் கவரப்பட்டேன்.

தினசரி பேசத் தொடங்கினோம். ஒரு நாள் அவரைக் காதலிப்பதாகக் கூறினேன். ஆரம்பத்திலேயே லலிதா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டதைக் கூறினார். அது எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கவில்லை. அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகச் சொன்னேன்.

நிறைய பேர் தன் துணையின் முகத்தைப் பார்த்துக் காதலில் விழுந்து, திருமணம் செய்கிறார்கள். ஆனால் லலிதாவைப் பொறுத்தவரை அவரின் முகத்தைப் பற்றிக் கவலைப் படவில்லை. அவர் ஓர் இனிமையான பெண்'' என்கிறார்.

பழி வாங்கும் நோக்கில் ஆசிட் வீசிய உறவினர்

லலிதா தன் உறவினரால் 2012-ல் ஆசிட் வீச்சுக்கு உள்ளாக்கப்பட்டவர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரின் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார் லலிதா. அங்கே அவரின் இளைய சகோதரனுக்கும், மாமா மகனுக்கும் இடையில் சிறு சண்டை ஏற்பட்டது. அதைத் தீர்த்து வைக்க முற்பட்ட லலிதா இருவரின் கன்னத்திலும் அறைந்து, சண்டையை நிறுத்தச் சொன்னார்.

லலிதாவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்ததால், அங்கேயே அவர் தங்கியிருந்தார். கன்னத்தில் அறைந்ததற்கு பழி வாங்கும் விதமாக, அவரின் மாமா மகன் திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்னர், ஆசிட் வீசியுள்ளார்.

29 அறுவை சிகிச்சைகள்

இதைத் தொடர்ந்து பாம்பே மருத்துவமனையில் லலிதாவுக்கு 17 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து 12 சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து தற்போது லலிதா, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மைய அறக்கட்டளையில் பணிபுரிகிறார்.

திருமணத்துக்கு உதவிய தன்னார்வலர்கள்

பொருளாதார ரீதியில் நலிவுற்று இருந்த லலிதா- ரவியின் திருமணத்துக்கு ஏராளமானோர் உதவியுள்ளனர். உணவு, அலங்காரம், மண்டபம், தேனிலவுக்கான செலவுகளை ஒரு நிறுவனம் ஏற்றுக்கொண்டது. சிவாஜி பூங்கா அரிமா சங்கத்தினர் ரூ.25,000 பணத்தைப் பரிசாக அளித்துள்ளனர்.

உடையலங்கார நிபுணர்கள் இருவர் மணமக்களுக்கான உடை, நகைகளை அளித்துள்ளனர். நடிகர் விவேக் ஓபராய் மும்பையில் ஒரு வீட்டை லலிதா - ரவிக்குப் பரிசாக அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x