

உத்தராகண்ட் முதல்வர் விஜய் பகுகுணா தனது பதவியை இன்று ராஜிநாமா செய்தார்.
ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் ஆசிஷ் குரேஷியிடம் ஒப்படைக்கும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் பகுகுணா கட்சி தலைமையக உத்தரவை அடுத்து தான் பதவியை ராஜிநாமா செய்வதாக தெரிவித்தார்.
புதிய முதல்வரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்வு செய்வார் எனவும் அவருக்கு அந்த அதிகாரத்தை வழங்குவதற்காக நாளை நடைபெறும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் விஜய் பகுகுணா தெரிவித்தார்.
உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் மேலிட பார்வையாளரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களான அம்பிகா சோனி மற்றும் ஜனார்த்தன் திவேதி ஆகியோர் நாளை உத்தராகண்ட் செல்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு மீட்பு பணிகளில் விஜய் பகுகுணா தாமதம் செய்ததாக எழுந்த விமர்சனங்களை அடுத்து அவரை மாற்றுவது குறித்து கட்சி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வந்தது. இந்நிலையில், இன்று அவர் கட்சி உத்தரவுக்கு இணங்கி ராஜிநாமா செய்துள்ளார்.
உத்தராகண்ட் மாநில புதிய முதல்வராக ஹரீஷ் ராவத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.