

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணையின்போது, அவரது வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அருண் ஜேட்லி பற்றி கூறிய கருத்து இழிவானது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராக அருண் ஜேட்லி பதவி வகித்தபோது நிதி முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியினர் புகார் கூறினர். இதையடுத்து, கேஜ்ரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக, ரூ.10 கோடி கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அருண் ஜேட்லி அவதூறு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இணை பதிவாளர் தீபாலி சர்மா முன்பு அருண் ஜேட்லி ஆஜரானார். அவரிடம் கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது ஜெத்மலானி கூறிய ஒரு வார்த்தைக்கு ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கடும் மோதல் ஏற்பட்டதால் விசாரணை பாதியிலேயே முடிந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. ஜேட்லி சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர்கள் ராஜிவ் நாயர் மற்றும் சந்தீப் சேதி ஆகியோர் இந்தப் பிரச்சினையை எழுப்பினர். “ஜேட்லி பற்றி ஜெத்மலானி கூறியது அவரது சொந்த கருத்தா அல்லது கேஜ்ரிவால் இவ்வாறு கூறச் சொன்னாரா என விளக்கம் தேவை” என்றனர்.
இதுகுறித்து, நீதிபதி மன்மோகன் கூறும்போது, “கேஜ்ரிவால் அறிவுரையின்படி ஜேட்லி பற்றி ஜெத்மலானி அந்தக் கருத்தைக் கூறினார் என்றால் குறுக்கு விசாரணையை தொடர்வதில் அர்த்தமில்லை. முதலில் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது குற்றச்சாட்டை பதிவு செய்யட்டும்” என்றார்.