

அரசு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படு வதை எதிர்த்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
மாநிலங்களவை நேற்று கூடியதும், வழக்கமான அலுவல் களை ஒத்தி வைத்து, ஆதார் கட்டாயமாக்கப்படுவது தொடர் பான பிரச்சினையை விவாதிக்க திரிணமூல் காங்கிரஸ், பிஜுஜனதா தளம், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. இதனை மாநிலங்களவை அவைத் தலைவர் நிராகரித்தார்.
குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் எண், அரசு சலுகைகளைப் பெறுவதற்கு கட்டாயமில்லை. இதுதொடர்பான போதுமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதனை எதிர்க் கட்சியினர் ஏற்க மறுத்து அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை கூடியதும் சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால், திரிண மூல் எம்பி. டெரிக் ஓ பிரையன், பிஜு ஜனதா தளம் எம்.பி. திலிப் திர்கே ஆகியோர் நோட்டீஸ் அளி்த்தனர். அவை துணைத்தலைவர் பி.ஜே. குரியன் அதனை நிராகரித்தார்.
சமாஜ்வாதி எம்.பி. ராம்கோபால் யாதவ் பேசும்போது, “ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டை சலுகைகள், மானிய விலை சமையல் எரிவாயு, ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை நிறுத்தி வைக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது” என குற்றம்சாட்டினார்.
அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசும்போது, “ஆதார் கட்டாய மில்லை. தேவைப்பட்டால் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். நேரடி மானியத்திட்டம் காலத்தின் கட்டாயம். இவ்விவகாரம் குறித்து விரைவில் தெளிவுபடுத்தப்படும்” என்றார்.
பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, “ஆதார் இல்லாதவர்கள் மூன்று மாதங்களில் பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதுவரை அவர்களின் எரிவாயு மானியம் தனியாக ஒதுக்கி வைக்கப்படும். அதற்கு மானியம் நிறுத்தப்பட்டதாக பொருள் அல்ல. 85 சதவீதம் பேர் ஆதார் பெற்றுள்ளனர்” என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாதி எம்.பி. நரேஷ் அகர்வால், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேண்டு சேகர் ராய், மார்க்சிஸ்ட் எம்.பி. தபன் குமார், காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர், “ஆதார் முழு மையாக வழங்கப்படாத நிலையில், அரசு மானியம், சலுகைகளைப் பெற அதனைக் கட்டாயப்படுத்தக் கூடாது” என வலியுறுத்தினர்.
எஞ்சியவர்களுக்கும் விரைவாக ஆதார் அட்டை வழங்கப்படும் என வெங்கய்ய நாயுடு பதிலளித்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை 12 மணிக்குப் பிறகு 15 நிமிடங்கள் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடினாலும் அமளி ஓயவில்லை. இதைத் தொடர்ந்து 2 மணி வரை அவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.