முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கேஜ்ரிவால்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கேஜ்ரிவால்
Updated on
2 min read

டெல்லி சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். இதனால் ஆம் ஆத்மி கட்சியின் 49 நாள் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

வாக்கெடுப்பில் தோல்வி

மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் ஜன்லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தி இருந்தார். ஆனால், அதை மீறி சட்டமன்றத்தில் மசோதாவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய ஆம் ஆத்மி அரசு முயன்றது. இதற்கு பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரை அவர்கள் சூழ்ந்து முற்றுகையிட்டதால் இரண்டு முறை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் மசோதாவை அறிமுகம் செய்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 70 உறுப்பினர்கள் கொண்ட அவையில் ஆம் ஆத்மி கட்சியின் 27 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும் பாஜக, காங்கிரஸை சேர்ந்த 42 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேறவில்லை. அப்போது சட்டமன்றத்தில் கேஜ்ரிவால் பேசியதாவது:

முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ததால் காங்கிரஸ் எங்களை தடுக்கிறது. நாங்கள் இங்கு அரசைக் காப்பதற்காக இல்லை. நாட்டில் ஊழலை தடுப்பதற்காக இருக்கிறோம். இது எங்களது கடைசி கூட்டத்தொடராக இருக்கும். நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காக நான் ஆயிரம் முறை பதவியை ராஜினாமா செய்வதற்கு அதிர்ஷ்டம் செய்தவனாகக் கருதுவேன் எனத் தெரிவித்தார்.

அவசர ஆலோசனை

சட்டமன்ற கூட்டத்துக்குப் பின் டெல்லி அமைச்சரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அங்கு தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

ஜன்லோக்பால் மசோதா நிறை வேற்றுவதற்கு சட்டமன்றத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. முகேஷ் அம்பானி மீதும், வீரப்ப மொய்லி மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட்டோம்.

எங்கள் ஆட்சி தொடர்ந்தால் இன்னும் எத்தனை பேர் மீது வழக்குகள் பதிவாகி விடுமோ என காங்கிரஸ் பயந்துவிட்டது. இதற்காக, அந்தக் கட்சி பாஜகவுடன் சேர்ந்து கொண்டது. இவர்களின் அரசை முகேஷ் அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்கள் நடத்துகின்றனர்.

இதனால் நாட்டில் பெருகி வரும் ஊழலை ஒழிக்க எங்கள் ஆட்சியால் முடியவில்லை. இதற்காக, ஆம் ஆத்மி ஆட்சியின் அமைச்சரவை கூடி ஆலோசனை செய்தது. அதில், டெல்லி முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் டெல்லி சட்டமன்ற தேர்தலை புதிதாக சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டது. எனவே, துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க இருக்கிறோம்.

அவர்களைப் பொறுத்தவரை சட்டமன்றத்தில் மைக்கை உடைத்தால், சட்டத்தை மதிப்பது, பேப்பரைக் கிழித்தால் சட்டத்தை மதிப்பது போலாகும். நான் மக்களுக்காக ஊழலை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டு வந்தால் அது சட்டத்திற்கு எதிரானதா? மக்களவைத் தேர்தலில் அவர் களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in