

ஆவணங்கள் எதுவும் இல்லாமல், டெல்லி அரசுப்பள்ளியில் தன் படிப்பைத் தொடர விரும்பிய பாகிஸ்தான் சிறுமிக்கு, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரின் உதவியால், டெல்லி சஞ்சய் காலனி அரசுப் பள்ளியில் இடம் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழில் கடந்த 7-ம் தேதி (செப். 7) வெளியான செய்தியில் டெல்லி அரசுப் பள்ளியில் சேர முடியாமல் பாகிஸ்தானிலிருந்து வந்து அகதியாக தஞ்சம் புகுந்துள்ள சிறுமி மது தவித்து வருவதாக செய்தி வெளியானது.
இதைத்தொடர்ந்து சனிக்கிழமை மாலை மதுவைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை தொலைபேசியில் அழைத்து, மதுவின் நிலையை எடுத்துக்கூறி அவர் படிக்க விரும்பும் பள்ளியில் இடம் கொடுக்கச் சொன்னார்.
கேஜ்ரிவாலும், மதுவுக்கான அனைத்து உதவுகளையும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா செய்வார் என்று வாக்களித்தார்.
கடந்த திங்கள் கிழமை காலையில் மதுவைச் சந்தித்த டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ''பாகிஸ்தானில் இருந்து தன்னுடைய கல்வி ஆசையைத் துரத்திய மதுவுக்காக பள்ளி விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன'' என்று கூறியுள்ளார். இதனால் பள்ளிக்குச் செல்லும் மதுவின் கனவு இன்று நனவாகியுள்ளது. அவர் டெல்லி, ஃபதேபூர் பெரி, சஞ்சய் காலனியில் உள்ள அரசுப்பள்ளியில் அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. படிப்பைத் தொடர்கிறார் மது.
யார் இந்த மது?
மதுவுக்கு 16 வயது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் அவர் தனது தாய், உடன் பிறந்தோர் மற்றும் சில உறவினர்களுடன் இந்தியா வந்தார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்த அவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது. தந்தையை இழந்து வாடி வந்த அக்குடும்பத்தினர் மத நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இந்தியாவுக்கு திரும்ப முடிவு செய்தனர்.
இதனையடுத்து அவர்கள் இந்தியா திரும்பினர். ஆனால் மிகுந்த நெருக்கடிக்கு இடையே அவர்கள் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டதால் அவர்களால் முக்கிய ஆவணங்களை எடுத்துவர முடியவில்லை. டெல்லி சஞ்சய் காலனியில் குடியேறினர்.
இந்நிலையில் இந்தியா வந்த பின்னர், முக்கிய ஆவணங்களை பாகிஸ்தானிலேயே விட்டு வந்ததால் மதுவால் இங்கு பள்ளி படிப்பை தொடர முடியவில்லை. இதுதொடர்பான செய்தி 'தி இந்து' ஆங்கில நாளிதழில் வெளியான பிறகு, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரின் உதவியால் அரசுப் பள்ளியில் இடம் கிடைத்துள்ளது.