

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரான அர்விந்த் கெஜ்ரிவால். இதே தொகுதி யில் பாஜக சார்பில் அதன் முன்னாள் மாநில தலைவ ரான விஜயேந்திர குப்தா போட்டியிடுகிறார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடை பெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான சனிக்கிழமை, தனது தாய் கீதா, தந்தை கோவிந்த்ராம் மற்றும் மனைவி சுனிதாவுடன் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார் கெஜ்ரிவால்.
மனுதாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கெஜ்ரி வால் பேசுகையில், "இங்கு போட்டியிடு வது நாங்கள் அல்ல டெல்லி மக்கள். இவர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜக-வின் ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, டெல்லிவாசிகளின் சார்பில் நான் போட்டியிடுகிறேன். அவரது (ஷீலா) மனு தாக்கலை உறுதி செய்வதற்காக கடைசி நாள் வரை காத்திருந்தேன். இனி ஷீலா ஆட்சியின் 'கவுண்ட் டவுன்' தொடங்கி விட்டது" எனத் தெரிவித்தார்.
தனக்கும், தன் மனைவிக்குமாக சேர்த்து இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாகவும் இரண்டு வழக்குகளில் தம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறிய வழக்குகள் நடந்து வருவதாகவும் அதில் கூறியுள்ளார்.
இதே தொகுதியில் ஷீலா தீட்சித் கடந்த வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதே நாளில், பாஜக-வின் முதல்வர் வேட்பாளரான டாக்டர் ஹர்ஷவர்தன், கிருஷ்ணா நகர் தொகுதியில் மனு தாக்கல் செய்தார். இவர் தொடர்ந்து மூன்று முறையாக வெற்றி பெற்றவர்.
எனவே, இவரை எதிர்த்து போட்டியிட, ஆம் ஆத்மி கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பேர் மறுத்து விட்டனர். இதனால் அங்கு போட்டியிட வேட்பாளர் கிடைக்காமல் தவித்தனர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான 63 வயது இஷ்ரத் அலி அன்சாரி என்பவர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் கடைசி நாளில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி சட்டப்பேர வைக்கான வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.