கடும் குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களுக்கு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை

கடும் குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களுக்கு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
Updated on
1 min read

கடும் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், தவறான வேட்பு மனுக்களும் வேட்பாளர்களை தகுதி இழக்கச் செய்வதற்கு அடிப்படையாக அமைய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின் படி, குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட வேட்பாளர்களின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவி உடனடியாகப் பறிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது பரிந்துரைகளில் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறும்போது, “குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள், அது போன்ற வழக்குகளில் குறைந்தது 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், அல்லது தேர்தல் நடைபெறும் தேதிக்கு 6 மாதங்கள் முன்பாக நீதிபதியால் குற்றப்பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்கள் போன்றவற்றில் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் வழிமுறைகளை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநிலத்தில் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பற்றி வெளியான தரவுகள் வருமாறு:

* மகாராஷ்டிரத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 23% கடும் குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள். 34% வேட்பாளர்கள் சாதாரண குற்ற வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள்.

* மகாராஷ்டிராவில் வேட்பாளர்களின் சராசரி சொத்து ரூ.4.65 கோடி. 47% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.

* ஹரியாணாவில் சாதாரணக் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள வேட்பாளர்கள் 94%. கடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5%.

ஹரியாணாவில் மாநிலத்தில் 42% கோடீஸ்வர வேட்பாளர்கள். சராசரி சொத்து விவரம்: ரூ.4.45 கோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in