

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவையில், ‘உ.பி. மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் திருத்த மசோதா 2016’ நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மசோதா நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.128 கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்மூலம் எம்எல்ஏ.க்களுக்கு மாத சம்பளம் ரூ.10,000-ல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயரும். தொகுதி படி ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகும். மருத்துவ படி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கும். எம்எல்ஏ.க்களின் செயலாளர் படி ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
ஆண்டுக்கு டீசல் படி மற்றும் ரயில் பயண படி ரூ.3.25 லட்சத்தில் இருந்து ரூ.4.25 லட்சமாக அதிகரிக்கும். இதில் எம்எல்ஏ.க்கள் தனிப்பட்ட முறையில் பயணம் செல்லும் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசலுக்காக மாதந்தோறும் ரூ.25 ஆயிரத்தை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்போது வழங்கப்படும் தினப்படி ரூ.1000-ல் இருந்து ரூ.2000 ஆக உயரும்.
இதேபோல் முன்னாள் எம்எல்ஏ.க்களின் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கும். ரயில் பயண சலுகை ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகும். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு எம்எல்ஏ.க்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித் துள்ளது.