

சிறையில் இருந்தபடி தேர்தலில் போட்டியிடும் வழக்கம் உ.பி.யில் தொடர்கிறது.
உ.பி. தேர்தலில் குறிப்பாக இறுதிக்கட்ட தேர்தலில் கைதிகள் பலர் சிறையில் இருந்தபடி போட்டி யிடுகின்றனர். இதை அவர்கள் கவுரமாக கருதுகின்றனர். கிழக்கு உ.பி.யின் மகராஜ்கன்ச் மாவட்டத்தில் உள்ள நவ்தன்வான் தொகுதியில் அமன்மணி திரிபாதி என்ற கைதி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவர் தனது மனைவியை கொன்றதாக சிபிஐ பதிவு செய்த வழக்கில் சிறையில் உள்ளார். இவருக்கு ஆளும் சமாஜ்வாதி கட்சி சார்பில் கிடைப்ப தாக இருந்த வாய்ப்பு நழுவிவிட்ட தால் சுயேச்சை வேட்பாளர் ஆகி விட்டார். இவருக்கு எதிராக இவரது மாமியார் வீடியோ பதிவு ஒன்றை யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அமன்மணி மட்டுமின்றி, அவரது தந்தை அமர்மணி திரிபாதி (உ.பி. முன்னாள் அமைச்சர்), தாய் மதுமணி திரிபாதி ஆகியோரும் சிறையில் உள்ளனர். இவர்கள் இருவரும் பெண் பாடகி மதுமிதா சுக்லா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் அமன்மணிக்காக அவரது தங்கைகள் தனுமணி, அலன்கிரிதா ஆகிய இருவரும் பிரச்சாரம் செய்கின்றனர். இவர் களில் தனு, லண்டனில் பட்டமேற் படிப்பு படித்து வருகிறார். அலன், ஆடை வடிவமைப்பு கல்வி பயின்றுள்ளார்.
‘தி இந்து’விடம் தனுமணி கூறும்போது, “பிரச்சாரத்துக்கு தலைமை ஏற்க எங்கள் குடும்பத் தில் எவரும் இல்லை. தாய், தந்தை, அண்ணன் மூவரும் சிறையில் இருப்பதால் நாங்கள் முதல்முறை யாக பிரச்சாரத்தில் இறங்கியுள் ளோம். பொய் வழக்கில் சிக்கியிருக் கும் எங்கள் அண்ணனுக்காக நீதிமன்றத்தில் போராடி வரு கிறோம். மக்கள் நீதிமன்றத்தில் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது” என்றார்.
உ.பி.யின் முன்னாள் அமைச்ச ரும் பிரபல அரசியல்வாதியுமான அமர்மணி, பகுஜன் சமாஜ், சமா ஜ்வாதி ஆகிய கட்சிகள் சார்பில் நவ்தன்வான் தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப் பட்டவர். கொலை வழக்கில் இவர் கடந்த 2012-ல் தண்டிக்கப்பட்டதால், அப்போது அவரால் போட்டியிட முடியவில்லை. அப்போது தனக்கு பதிலாக விரேந்திரா ஷாஹி என்பவரை தனது தொகுதியில் நிறுத்தினார் அமர்மணி. விரேந்திர ஷாஹியும் குற்ற வழக்கில் சிறை யில் இருந்தபடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை இவ ருக்கு பதிலாக தனது மகன் அமனை நிறுத்தியுள்ளார் அமர்மணி.
மாவ் நகர தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முக்தார் அன்சாரி போட்டியிடுகிறார். உ.பி. யின் குற்றப் பின்னணி அரசியல் வாதிகள் பட்டியலில் இடம்பெற் றுள்ள முக்தார் அன்சாரி, கவுமி ஏக்தா தளம் என்ற பெயரில் கட்சி நடத்திவந்தார். தற்போது அதை மாயாவாதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைத்துவிட்டார். முக்தார் அன்சாரி தற்போது, பாஜக தலைவர் கிருஷ்ணராய் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக் கிறார். முக்தார் அன்சாரிக்கு எதிராக பாஜக சார்பில் கிருஷ்ணராயின் மனைவி அல்கா ராய் நிறுத்தப்பட் டுள்ளார்.
சண்டவுலி மாவட்டத்தின் சையத்ராசா தொகுதியில் பகுஜன் சமாஜ் சார்பில் வினித்சிங் என்கிற ஷியாம் நாராயண் சிங் போட்டியிடுகிறார். ஆட்கடத்தல் வழக்கில் சிக்கிய வினித்சிங் தற்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி சிறையில் உள்ளார்.