

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் இரவு குண்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, குறிப்பிட்ட சில பகுதிகளில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ம் தேதி, ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப் பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. பிரிவினை வாதிகளின் தொடர் போராட்ட அறிவிப்புகளால் அங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நீடிக்கிறது. கல்வீச்சில் ஈடுபடும் இளைஞர்களை பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தும் விரட்டி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீநகரின் ஹர்வான் பகுதியில் பெல்லட் குண்டு காயங்களுடன் டீன்ஏஜ் இளைஞர் ஒருவரின் உடல் நேற்று முன்தினம் இரவு கண்டெடுக்கப்பட்டது. பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் இந்த இளைஞர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து வன்முறை ஏற்படலாம் என்ற அச்சம் கருதி, ஸ்ரீநகரின் டவ்ன்டவுன், பட்டமலூ பகுதியில் 5 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படது. இது தவிர, பட்காம், புல்காம் நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் 144 தடை உத்தரவு நேற்றும் தொடர்ந்தது.