பா.ஜ.க.வில் மீண்டும் இணைகிறார் எடியூரப்பா

பா.ஜ.க.வில் மீண்டும் இணைகிறார் எடியூரப்பா
Updated on
2 min read

கர்நாடக முன்னாள் முதல்வரும், கர்நாடகா ஜனதா கட்சித் தலைவருமான‌ எடியூரப்பா மீண்டும் பா.ஜ.க. வில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 9-ஆம் தேதி பெங்களூரில் நடைபெற இருக்கும் கர்நாடக ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்த முக்கிய முடிவை எடியூரப்பா அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகத்தில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமையக் காரணமாக இருந்தவர் பி.எஸ்.எடியூரப்பா. பல்வேறு தடைகளையும், சவால்களையும் கடந்து இரண்டரை ஆண்டுகாலம் முதல்வராக இருந்த இவர், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை இழந்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி பா.ஜ.க.வில் இருந்து விலகி, டிசம்பர் 10-ஆம் தேதி 'கர்நாடக ஜனதா கட்சி' யைத் தொடங்கினார்.

கடந்த கர்நாடக‌ சட்டசபை தேர்தலில் தனியாக போட்டியிட்டு 6 தொகுதிகளைக் கைப்பற்றினார். மேலும் பெரும்பாலான தொகுதி களில் பா.ஜ.க.வின் வாக்குகளைப் பிரித்து அக்கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் பா.ஜ.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் போனது.

பா.ஜ.க.வின் விருப்ப‌ம்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லாத நிலையில், ஒரே நம்பிக்கையான கர்நாடகத்தையும் இழக்க பா.ஜ.க. விரும்பவில்லை. கர்நாடகத்தில் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்து மக்களின் ஆதரவைப் பெற்ற எடியூரப்பா, மீண்டும் பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டால் பலமாக இருக்கும் என பா.ஜ.க. கருதுகிறது.

எனவே, பா.ஜ.க.வில் மீண்டும் இணையுமாறு எடியூரப்பாவிற்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, எடியூரப்பா கடந்த செப்டம்பரில், 'மீண்டும் பா.ஜ.க.வில் இணைவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும், அதே நேரத்தில் நரேந்திர மோடியை தம் கட்சி நிபந்தனையின்றி ஆதரிக்கும்' என்றும் அறிவித்தார்.

கோரிக்கைகளை ஏற்ற பா.ஜ.க.

இந்நிலையில் தான் பா.ஜ.க.வில் மீண்டும் இணைவதற்கு எடியூரப்பா சில கோரிக்கைகளை முன் வைத்தார். அதாவது தனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியையும், மாநில தேர்தல் பிரச்சார குழு தலைவர் பதவியையும் தர வேண்டும். மேலும் தனது ஆதராவளர்கள் 10 பேருக்கு நாடாளுமன்ற‌ தேர்தலில் போட்டியிட சீட் வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வைத்தார்.

இதுகுறித்து, மாநில தலைவர்களு டன் பா.ஜ.க. மேலிடம் கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக ஆலோசித்தது. கர்நாடக பா.ஜ.க. நிர்வாகிகள் எடியூரப்பாவுக்கு பச்சைக்கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்தே எடி யூரப்பா கர்நாடக அரசுக்கு எதிராக நடத்திய அனைத்து போராட்டங்களுக்கும் முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டரும், சதானந்த கவுடாவும் ஆதரவு தெரிவித்தனர்.

டிசம்பர் 9-ஆம் தேதி முடிவு?

இந்நிலையில், தமது கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் பா.ஜ.க. வில் இணைவது குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக எடியூரப்பா தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. அப்போது கட்சியைத் தொடர்ந்து நடத்தலாமா, அல்லது தாய்க்கட்சியில் இணையலாமா என முடிவு எடுக்கப்படும் என எடியூரப்பா செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in