Published : 12 Apr 2014 12:00 AM
Last Updated : 12 Apr 2014 12:00 AM

முலாயம் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு: மகளிர் ஆணையம் நோட்டீஸ்

பாலியல் பலாத்காரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மும்பை சக்தி மில் வளாகத்தில் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்ட மூவருக்கு மும்பை நீதிமன்றம் கடந்த வாரம் மரண தண்டனை வழங்கியது. இந்நிலையில் மொராதாபாத்தில் வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முலாயம் சிங் யாதவ், “பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார். “சிறுவர்கள் எப்போதும் சிறுவர்களே. சில நேரங்களில் இதுபோன்ற தவறுகள் நடந்து விடுகின்றன” என்றும் கூறினார்.

முலாயம் சிங்கின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா சர்மா வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், “பாலியல் பலாத்காரம் குறித்த முலாயம் சிங்கின் பேச்சுக்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். பொறுப்பற்ற முறையில் பேசியதற்காக நாட்டின் அனைத்துப் பெண்களிடமும் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்றார்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே முலாயம் தனது கருத்தை திரும்பப் பெறவேண்டும், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “பலாத்கார குற்றங்கள் தொடர்பாக முலாயம் கூறிய கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. அமையவிருக்கும் மத்திய அரசில் அவரும் பங்கேற்றால், பலாத்கார சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து விடுவார். பொய் புகார் அளிக்கும் பெண்களை தண்டிக்க வேண்டும் என்பது பெண்களை மிரட்டும் செயலாகும்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறுகையில், “பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை கூடாது என ஒருவர் கூறலாம். ஆனால் பலாத்காரத்தை சாதாரண தவறு போல் சித்தரிக்கும் முலாயம் சிங்கின் கருத்து மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், “முலாயம் சிங் யாதவ் நிதானம் இழந்துவிட்டார். பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு சமூகத்தில் இடமில்லை. அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.

நிர்பயாவின் தந்தை

‘தி இந்து’விடம் கூறுகையில், “முலாயம் சிங் போன்ற மூத்த அரசியல் தலைவர் இதுபோன்று பேசியிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இவரைப் போன்ற தலைவர்களால்தான் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு உறுதியில்லாமல் உள்ளது” என்றார்.

முலாயம் விளக்கம்

இந்நிலையில் உ.பி.யில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிய முலாயம், “எங்களைவிட பெண்களை உயர்வாக மதிப்பவர் நாட்டில் யாருமில்லை” என்றார்.

“மரண தண்டனைக்கு எதிராக நாடு முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. சில நாடுகள் அதை தடை செய்துள்ளன. இந்தியாவிலும் இந்த தண்டனைக்கு எதிராக விவாதம் நடத்தப்பட வேண்டும். பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான புதிய சட்டம் தவறானது. அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க இச்சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். இச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார் முலாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x