

முன்னாள் மத்திய அமைச்சரும், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ஜாபர் ஷெரீப், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூரில் தனது ஆதரவாளர்களுடன் ஜாபர் ஷெரீப் திங்கள்கிழமை ஆலோ சனை நடத்தினார்.
வரும் மக்களவைத் தேர்தலில், பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் கட்சி யின் சார்பில் போட்டியிட ஜாபர் ஷெரீபுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இளைஞர் காங்கிரஸை சேர்ந்த ரிஸ்வான் என்பவரை அத்தொகுதியில் நிறுத்தப்போவதாக தெரிவித்தது. இதனால் ஜாபர் ஷெரீப் அதிருப்தி அடைந்தார்.
``காங்கிரஸ் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை. இளையவர்கள் கட்சிக்கு முக்கியம் என்றாலும் முதிய வர்களை புறக்கணிக்கக் கூடாது'' என சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அதோடு, ஹாசன் தொகுதியில் போட்டியிடும் கர்நாடகத்தின் மூத்த தலைவர் தேவகவுடாவிற்கு மதிப்பளிக்கும் விதமாக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தக்கூடாது என்றும் கடிதம் எழுதினார்.
தேவகவுடா அழைப்பு
காங்கிரஸில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஜாபர் ஷெரீப், மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைந்தால் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் தேவகவுடா பகிரங்க அழைப்பு விடுத்தார். எனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாபர் ஷெரீப் தேவகவுடாவைச் சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தையில் ஜாபர் ஷெரீப் காங்கிரஸில் இருந்து விலகி மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைவது குறித்து ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை
இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஜாபர் ஷெரீப் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.அப்போது ம.ஜ.த.வில் இணைவதற்கு அவருடைய ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜாபர் ஷெரீப் பேசுகையில்,``காங்கிரஸில் இருந்து விலகுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே நேரம் காங்கிரஸைப் போல மதச்சார்பற்ற கொள்கையுடைய தேவகவுடாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து எந்த தயக்கமும் இல்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இணைவது குறித்து கூடிய விரைவில் உறுதியான முடிவு எடுக்கப்படும். மெக்காவிற்கு போய் வந்த வுடன் எனது முடிவினை தெரிவிப்பேன்''என்றார்.
83 வயதான ஜாபர் ஷெரீப் ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து காங்கிரஸில் இருக்கிறார். லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவம் மிக்கவர். 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 2009 மக்களவைத் தேர்தலிலும் பெங்களூர் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கி தோல்வியை தழுவினார். அதனால்தான் இந்த முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.