

சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு கைவிட உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எச்.எல். தத்து, எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
சேது சமுத்திரத் திட்டத்தால் மன்னார் வளைகுடா பகுதியின் சுற்றுச்சூழல் பேராபத்தைச் சந்திக்கும். அப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
“இந்தத் திட்டம் பொருளாதார அடிப்படையில் சாத்தியமற்றது, மாற்று வழியிலும் செயல்படுத்த முடியாது, அறிவியல், புவியியல், சுற்றுச்சூழல்ரீதியாக இத்திட்டம் சாத்தியமற்றது” என்று டாக்டர் பச்சோரி தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை அளித்துள்ளது. இவற்றை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ராமர் பாலம் இந்தியாவின் கலாசார சின்னம், இதனை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். சேது திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் கோரப்பட்டுள்ளது. சேது சமுத்திர வழக்கில் மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆஜராகி வந்தார்.
இந்நிலையில் சேது திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள மனுதாரர்கள் சார்பில் மோகன் பராசரனின் தந்தை முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரன் ஆஜராகி வருகிறார். எனவே, சேது வழக்கில் தன்னால் ஆஜராக முடியாது என்று மோகன் பராசரன் அண்மையில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவண் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நடை பெற்ற விசாரணையின்போது மத்திய அரசு வழக்கறிஞராக ராஜீவ் தவண் ஆஜரானார்.
தமிழக அரசின் மனு தொடர்பாக நீதிபதிகள் அவரிடம் விளக்கம் கோரியபோது தனக்கு 3 வாரங்கள் அவகாசம் தேவை என்று அவர் கோரினார்.
புதிதாக நியமிக்கப்பட்டி ருப்பதால் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை, அவற்றைப் படித்துப் பார்க்க காலஅவகாசம் தேவை என்று நீதிபதிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மத்திய அரசின் நிலைப்பாடு
சேது சமுத்திரத் திட்டத்தை 2005 ஜூன் 2-ம் தேதி மதுரையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார்.
பாக் ஜலசந்தி வரை பணிகள் நடைபெற்ற நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், பச்சோரி கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்கவில்லை என்றும் சேது திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளோம்” என்றும் தெரிவித்துள்ளது.