

தமிழகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் உள்ளது. கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சபாநாயகர் இதற்கான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் அதிமுகவினர், கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் புதிய முதல்வராக பதவியேற்றார். இவர் இன்று கூடவிருக்கும் தமிழக சட்டப்பேரவையில் அவையின் நம்பிக்கையை கோரவிருக்கிறார். நம்பிக்கை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பழனிசாமிக்கு வாக்களிக்கும்படி கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக் கள், பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களிக்க உள்ளனர். இவர்கள் அனைவரும் பதவியிழக்கும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சிக் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர் ஒருநாள் முன்னதாக கூறுவார்.
இந்த உத்தரவுக்கு எதிராக எம்எல்ஏக்கள் வாக்களித்தால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் பதவியிழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதில் சபாநாயகர் தான் இறுதி முடிவு எடுக்க முடியுமே தவிர, தேர்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று தெரிவித்தனர்.
கொறடா உத்தரவுக்கு கீழ்படியாமல் வாக்களித்தால், கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் இவர்கள் பதவியை பறிக்கலாம் என்றாலும் எல்லா கட்சிகளும் இதற்கு பரிந்துரை செய்வதில்லை. பெரும்பாலான கட்சிகள் தங்களுக்கு கிடைக்கும் அரசியல் லாபத்தைப் பொறுத்து ‘கட்சிக்கு கீழ்படியாமல் வாக்களித்தவர்கள் (Cross Voting)’ மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என முடிவு செய்கின்றன.
இதனால்தான் ஓ.பன்னீர் செல்வம், அவருக்கு ஆதரவளித்த மாஃபா.பாண்டியராஜனை கட்சி யில் இருந்து நீக்கிய சசிகலா, மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப் படுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பி.ஆர்.எஸ் சட்ட ஆய்வு அமைப்பின் தலைவரான எம்.ஆர்.மாதவன் கூறும்போது, “வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித் தவர்கள் மீது வாக்கெடுப்புக்குப் பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். அவர்கள் அளித்த வாக்குகள் அரசுக்கு எதிரான வாக்குகளாகவே கருதப்படும். எதிர்ப்பு வாக்குகள் அதிகம் இருந்தால் பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் நீதிமன்றம் செல்லும் வாய்ப்புகள் இருப்பினும் அதில் உடனடியான தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை” என்றார்.
பிஹாரில் கடந்த ஜூன், 2014-ல் நடந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இதனால் நால்வரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
உ.பி.யிலும் நான்கு மாதங்களுக்கு முன் நடைபெற்ற மேல்சபை தேர்தலில் ஆளும் சமாஜ்வாதியின் 10 எம்எல்ஏக்கள், பாஜக ஆதரவு வேட்பாளர்களுக்கு வாக்களித்தனர். ஆனால் அடுத்த சில மாதங்களில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு இவர்கள் மீது சமாஜ்வாதி கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.