

மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் தலித் எழுத்தாளர், அம்பேத்கரிய சிந்தனையாளர் கிருஷ்ணா கிர்வாலே மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளது மகாராஷ்டிர நெடுக அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
62 வயதான டாக்டர் கிருஷ்ணா கிர்வாலே தனது இல்லத்தில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கோலாப்பூர் சிவாஜி பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எச்.ஏ.டி.ஏ காலனியில் அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார் கிருஷ்ணா கிர்வாலே, போலீஸ் இன்று மதியம் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை கொலைக்கான காரணமோ, கொலையாளி பற்றிய விவரங்களோ தெரியவில்லை.
டாக்டர் அம்பேத்கர் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையத்தின் தலைவரான இவர் அம்பேத்கரின் சிந்தனைகளில் ஊறியவர், இவரது எழுத்துக்களில் அம்பேத்கரிய கருத்துகளும் தலித் எழுச்சி, சாதியத்தை அகற்றுதல் குறித்த தீப்பொறி பறக்கும் உள்ளடக்கங்களால் இவர் பலராலும் மிகவும் மதிக்கக்கூடிய பிரபலஸ்தராக திகழ்ந்தார். இவரது எழுத்துக்கள், கட்டுரைகளிலிருந்து மேற்கோள்களை நிரூபணத்துக்காக, குறிப்புதவியாக பலராலும் காட்டப்படுவதுண்டு.
1954-ல் பிறந்த டாக்டர் கிர்வாலே, அவுரங்காபாத் மிலிந்த் கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் அங்கு பிரபல தலித் எழுத்தாளர் டாக்டர் கங்காதர் பண்டாவ்னே என்பாரின் எழுத்துகளின் மூலம் பெரிய அளவில் தாக்கம் பெற்றார். இவர் மராத்தி மொழியில் முனைவர் பட்டம் பெற்றார்.
கிருஷ்ணா கிர்வாலேயின் மிகப்பெரிய பங்களிப்பு தலித் மற்றும் கிராம இலக்கியங்களுக்கான அகராதியாகும். மேலும் பாபுராவ் பாகுல் என்ற தலித் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.
இவர் மராத்தி இலக்கியம், அம்பேத்காரிய சிந்தனைகளை நிறைய இடங்களில் சொற்பொழிவாற்றியவர்.
இந்நிலையில் இவரது படுகொலை சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.