

ஐபிஎல் சூதாட்டத்தில் தொடர்புடைய ஒரு முக்கிய வர்த்தகரை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே காவல்துறை நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியதாக முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் புகார் கூறியுள்ளார்.
அவரது இந்த புகார் டெல்லி அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொழிலதிபரிடம், ஐபிஎல் சூதாட்டம் குறித்து டெல்லி காவல் துறையினர் விசாரணை நடத்தவிருந்த நிலையில் அதை ஷிண்டே நேரடியாக தலையிட்டு தடுத்ததார் என்பது அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு.
முன்னாள் உள் துறை செயலாளர் ஆர்.கே.சிங் குற்றச்சாட்டுகளில் உண்மையிருந்தால் ஷிண்டேவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது. மேலும், ஷிண்டே மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மனிஷ் திவாரி கேள்வி:
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் மனிஷ் திவாரி: "ஆர்.கே.சிங் போன்ற சில அதிகாரிகள் தங்கள் பதவிக்காலம் முடிந்த பிறகும் செய்தி ஊடகங்களில் பேசப்பட வேண்டும் என்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆர்.கே.சிங், ஷிண்டே மீதான இந்த புகாரை ஏன் முன்னரே தெரிவிக்கவில்லை. சிங், அவரது பதவியில் இருந்த போதே இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருக்கலாம்" என்றார்.
ஆர்.கே.சிங் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார் என்ற தகலையும் மனிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.